விளையாட்டு

நடுவர் தீர்ப்பை விமர்சிப்பதில் கவனம் தேவை - ஐசிசி யோசனை?

நடுவர் தீர்ப்பை விமர்சிப்பதில் கவனம் தேவை - ஐசிசி யோசனை?

webteam

நடுவரின் தீர்ப்பை விமர்சிக்கும் போது சற்று கவனமாக இருக்கவேண்டும் என்று உலகக் கோப்பை தொடரின் வர்ணனையாளர்களுக்கு ஐசிசி மின்னஞ்சல் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் கடந்த 6ஆம் தேதி ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் அணிகள் மோதியன. அந்தப் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் பந்துவீச்சின் போது நோ பால் வீசியிருந்தார். 

ஆனால் இதனை நடுவர் கிறிஸ் கஃபர்னி பார்க்காததால் அந்தப் பந்து நோ பாலாக கொடுக்கப்படவில்லை. அதற்கு அடுத்த பந்தில் வெஸ்ட் இண்டிஸ் வீரர் கிறிஸ் கெய்ல் ஆட்டமிழந்தார். இதற்கு முந்தைய பந்து நோ பாலாக கொடுக்கப்பட்டிருந்தால், இந்தப் பந்து ஃப்ரி ஹிட்டாக அமைந்திருக்கும். அப்போது கெய்ல் அவுட் ஆகாமல் இருந்திருப்பார். 

இதனையடுத்து நடுவர் இந்தச் சர்ச்சைக்குரிய முடிவை வெஸ்ட் இண்டிஸ் அணியின் வீரர்களான ஹோல்டர், பிராத்வேட் ஆகியோர் விமர்சித்திருந்தனர். அத்துடன் ஆட்டத்தின் போது வர்ணனையில் இருந்த முன்னாள் வெஸ்ட் இண்டிஸ் அணி வீரரான மைக்கேல் ஹோலிடிங், “இந்தப் போட்டியில் நடுவர்களின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது” என நேரலையில் தெரிவித்தார். 

இந்நிலையில் உலகக் கோப்பைக்கு வர்ணனை செய்ய ஒப்பந்தமானவர்களுக்கு ஐசிசி ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், “போட்டியின் போது வர்ணனையாளர்கள் நடுவர்களின் தீர்ப்பை விமர்சிப்பதில் சற்று கவனமாக இருக்கவேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே இனிவரும் போட்டிகளில் நடுவர்களின் முடிவு தவறாக இருந்தால் அதற்கு வர்ணனையாளர்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுவார்கள் என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.