virat kohli, rohit sharma x page
விளையாட்டு

டெஸ்ட் தரவரிசை| சரிவைச் சந்தித்த ரோகித், கோலி.. முன்னேறிய ரிஷப்.. முதலிடத்தில் நீடிக்கும் அஸ்வின்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சரிவைச் சந்தித்துள்ளனர்.

Prakash J

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியும், இலங்கை - நியூசிலாந்துக்கு இடையிலான மற்றொரு டெஸ்ட் போட்டியும் முடிவடைந்த நிலையில், டெஸ்ட் தரவரிசை பட்டியல் மாற்றம் கண்டுள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சொதப்பிய கேப்டன் ரோகித் சர்மா, புள்ளிப் பட்டியலில், ஐந்து இடங்கள் பின்தங்கி தற்போது 716 புள்ளிகளுடன் 10வது இடத்தைப் பெற்றிருக்கிறார். இதேபோன்று விராட் கோலியும் சொதப்பியதால், அவர் ஐந்து இடங்கள் சரிந்து டாப் 10 இடத்தைவிட்டு வெளியேறி இருக்கிறார். தற்போது அவர், 12வது இடத்தில் உள்ளார்.

ரிஷப் பண்ட், சுப்மன் கில்

அதேநேரத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச டெஸ்ட் போட்டிக்கு திரும்பிய ரிஷப் பண்ட், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம், அவர் தரவரிசை பட்டியலில் மீண்டும் முதல் டாப் 10 இடத்திற்கு நுழைந்து தற்போது ஆறாவது இடத்தில் இருக்கிறார்.

இதேபோன்று, வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால் ஐந்தாவது இடத்திலும், வங்கதேசத்துக்கு எதிராக முதல் டெஸ்டில் சதம் அடித்த சுப்மன் கில், ஐந்து இடங்கள் முன்னேறி தற்போது 14வது இடத்திலும் உள்ளனர். பேட்டிங் வரிசையில் ஜோ ரூட் முதலிடத்தில் தொடர்ந்து இருக்கிறார். கேன் வில்லியம்சன் இரண்டாவது இடத்திலும், டேரியல் மிச்செல் மூன்றாவது இடத்திலும், ஸ்டீவ் ஸ்மித் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

இதையும் படிக்க: மீண்டும் பணி அழுத்த மரணம்| லக்னோ வங்கி ஊழியர் மயங்கி விழுந்து பரிதாப உயிரிழப்பு - எழும் கேள்விகள்!

பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில், ஆறு விக்கெட்டுகள் வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வின் 871 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். இதேபோன்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் ஹேசல்வுட் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். ஜடேஜா ஒரு இடம் முன்னேறி ஆறாவது இடத்தில் இருக்கிறார்.

அஸ்வின்

இதுபோன்று நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அபாரமாக விளையாடி விக்கெட்டுகளை வீழ்த்திய பிரபாத் ஜெயசூர்யா ஐந்து இடங்கள் முன்னேறி தற்போது எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ஜடேஜா முதலிடத்திலும், அஸ்வின் இரண்டாவது இடத்திலும் ஷகிபுல் ஹசன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இதையும் படிக்க: பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்| அனுபவ சான்றிதழ் கேட்டதற்காக 3 மாத சம்பளம் கேட்ட நிறுவனம்!