விளையாட்டு

ஐசிசி டி20 தரவரிசை: பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானின் முதல் இடத்தை நெருங்கிய சூரியகுமார்

ஐசிசி டி20 தரவரிசை: பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானின் முதல் இடத்தை நெருங்கிய சூரியகுமார்

webteam

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை நெருங்கி உள்ளார் இந்திய வீரர் சூரியகுமார் யாதவ்.

ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் வீரர்களுக்கும் இந்திய வீரர் சூரியகுமார் யாதவிற்கும் முதல் இடத்திற்கான போட்டி ஒரு மாத காலமாகவே இருந்து வருகிறது. பாகிஸ்தான் அணியின் கேப்டனை பின்னுக்கு தள்ளி 2ஆவது இடத்திற்கு முன்னேறிய சூரியகுமார் யாதவ், தற்போது முதல் இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வானை நெருங்கி உள்ளார்.

டி20 போட்டிகளில் குறைவான ( 573 ) பந்துகளில் விரைவாக 1000 ரன்கள், ஒரு வருடத்தில் டி20 போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான ( 26 ) சிக்சர்கள் என பல டி20 ரெக்கார்டுகளை உடைத்து வருகிறார் இந்திய அணி வீரர் சூரியகுமார் யாதவ். இந்நிலையில் டி20 தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து முகமது ரிஸ்வானை பின்னுக்கு தள்ள இன்னும் 16 புள்ளிகளே இருக்கும் நிலையில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார் சூரியகுமார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளில் 2 அரை சதங்கள் அடித்ததை அடுத்து முகமது ரிஸ்வானை நெருங்கியுள்ளார் சூரியகுமார் யாதவ். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முகமது ரிஸ்வான் சிறப்பாக செயல்பட்டால் அதிக புள்ளிகள் பெறுவார் என்ற நிலையில் அவர் 1 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். மற்றும் சூரியகுமார் யாதவும் தென்னாப்பிரிக்காவுக்கான 3ஆவது டி20 போட்டியில் 8 ரன்களுக்கு வெளியேறியதால், இந்த இரு வீரர்களுக்குமான போட்டி உலககோப்பையில் நடக்கவிருக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டியில் முடிவை எட்ட உள்ளது.

அக்டோபர் 16ஆம் தேதி தொடங்க இருக்கும் 8ஆவது டி20 உலககோப்பையில், சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியிலேயே இந்தியா பாகிஸ்தான் அணியுடன் அக்டோபர் 23 ஆம் தேதி ஞாயிற்று கிழமை விளையாடவுள்ளது. அந்த போட்டியில் சிறப்பாக செயல்படும் வீரர் டி20 தரவரிசையின் முதல் இடத்தை தக்கவைத்து கொள்வார்.

பாகிஸ்தான் அணி வீரர் முகமது ரிஸ்வான் 854 புள்ளிகளுடன் முதல் இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறார். 838 புள்ளிகளுடன் இந்திய அணியின் சூரியகுமார் யாதவ் பின் தொடர்கிறார். 801 புள்ளிகளுடன் பாபர் அசாம், 777 புள்ளிகளுடன் மார்க்ரம் மற்றும் 733 புள்ளிகளுடன் டேவிட் மாலன் அடுத்தடுத்த இடத்தில் நீடிக்கின்றனர். மேலும் தென்னாப்பிரிக்க தொடரில் சிறப்பாக செயல்பட்ட கேஎல் ராகுல் 14ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.