விளையாட்டு

ஐசிசி டி20 நம்பர் 1 பேட்டர்: விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் பாபர் அசாம்!

ஐசிசி டி20 நம்பர் 1 பேட்டர்: விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் பாபர் அசாம்!

ச. முத்துகிருஷ்ணன்

ஐசிசி டி20 தரவரிசை: நம்பர் 1 பேட்டராக நீண்ட நாட்களாக முதலிடத்தில் இருந்த விராட் கோலியின் சாதனையை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முறியடித்தார்.

ஐசிசி ஆடவர் டி20 பேட்டர்களுக்கான தரவரிசையில் 1000 நாட்களுக்கு மேல் முதலிடத்தை தக்கவைத்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் புதிய டி20 சாதனையை படைத்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி டி20 தரவரிசையில் 1013 நாட்கள் நம்பர் 1 பேட்டராக இருந்த நெடுநாள் சாதனையை பாபர் அசாம் முறியடித்துள்ளார்.

தற்போது தரவரிசையில் பாபர் அசாம் 818 ரேட்டிங் புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்திலும், பாகிஸ்தான் விக்கெட் கீப்பர்-பேட்டர் முகமது ரிஸ்வான் 794 ரேட்டிங் புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த டி 20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு பாகிஸ்தானை எட்டியதில் பாபர் அசாம் முக்கிய பங்கு வகித்ததார். கடந்த ஆண்டு ஆட்டத்தின் 29 டி20 போட்டிகளில் விளையாடிய பாபர் அசாம் 939 ரன்கள் குவித்திருந்தார்.

இதற்கிடையில், விராட் கோலி இந்த ஆண்டு 2 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார் மற்றும் தரவரிசையில் 21வது இடத்தில் உள்ளார். கோலி தனது இயல்பான ஆட்டத்தை விளையாடுவதற்கும், அனைத்து வடிவங்களிலும் பெரிய ஸ்கோரை உருவாக்குவதற்கும் சிரமப்பட்டு வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக டி20 போட்டிகளில் ஒரு ஆண்டில் 300 ரன்களை கூட கோலி கடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

414 இடங்களை முன்னேறிய தீபக் ஹூடா!

இதற்கிடையில், சர்வதேச டி20 பேட்டிங் தரவரிசையில் 6வது இடத்தில் இருந்த இஷான் கிஷான், ஒரு இடத்தைப் பின்தள்ளி ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக தொடரில் இஷான் சிறப்பாக விளையாடிய போதிலும் அயர்லாந்திற்கு எதிரான சமீபத்தில் முடிவடைந்த 2-போட்டி T20I தொடரில் பெரிய அளவிற்கு சோபிக்க இயலாததால் இந்த பின்னடைவு தரவரிசையில் ஏற்பட்டுள்ளது. ஆடவருக்கான டி20 தரவரிசையில் கேஎல் ராகுல் 17வது இடத்திலும், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 19வது இடத்திலும் உள்ளனர். அதே நேரத்தில் தீபக் ஹூடா 414 இடங்கள் முன்னேறி ஒட்டுமொத்தமாக 104-வது இடத்தைப் பிடித்தார்.