ஹர்திக், அர்ஷ்தீப், ஸ்மிருதி எக்ஸ் தளம்
விளையாட்டு

சர்வதேச டி20 தரவரிசை |ஜெட் வேகத்தில் முன்னேற்றம் காணும் ஹர்திக், அர்ஷ்தீப்.. ஸ்மிரிதி, தீப்தி சரிவு!

ஐசிசி சர்வதேச கிரிக்கெட் தரவரிசையில் டி20 ஃபார்மட்டில் இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள்.

Viyan

ஐசிசி சர்வதேச கிரிக்கெட் தரவரிசையில் டி20 ஃபார்மட்டில் இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள். ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஹர்திக் மூன்றாவது இடத்துக்கு முன்னேறி அசத்தியிருக்கிறார். அதேசமயம் பெண்கள் பிரிவில் இந்திய துணைக் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் சிறு சரிவை சந்தித்திருக்கிறார்கள்.

ஹர்திக் பாண்டியா

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்கதேசத்துக்கு எதிராக டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலிரு போட்டிகளையும் வென்று தொடரைக் கைப்பற்றியிருக்கிறது இந்தியா. இந்தத் தொடரில் இந்தியாவின் சீனியர் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டுவருகிறார்.

முதல் போட்டியில் ஆட்டமிழக்காமல் 39 ரன்கள் விளாசிய அவர், டெல்லியில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் 32 ரன்கள் எடுத்தார். முதல் ஆட்டத்தில் அவர் 1 விக்கெட்டும் வீழ்த்தியிருந்தார். ஐபிஎல் தொடர் வரை அவரது செயல்பாடு சுமாராகவே இருந்துவந்த நிலையில், பல விமர்சனங்கள் அவரைத் துறத்தின. ஆனால் அதன்பிறகு ஒரு மாறுபட்ட வீரராக வந்திருக்கிறார் ஹர்திக். டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல முக்கியக் காரணமாகத் திகழ்ந்த அவர், வங்கதேச பௌலர்களை வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்.

இப்போது ஐசிசி வெளியிட்டிருக்கும் டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் மூன்றாவது இடம் பிடித்திருக்கிறார் அவர். 216 ரேடிங் புள்ளிகள் பெற்றிருந்த ஹர்திக், நான்கு இடங்கள் முன்னேற்றம் கண்டிருக்கிறார். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் (253 ரேடிங் புள்ளிகள்) இந்தப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். நேபாளத்தின் திபேந்திர சிங் ஐரி 235 ரேடிங் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இந்தியா சார்பில் ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த இடத்தில் அக்‌ஷர் படேல் இருக்கிறார். 145 ரேடிங் புள்ளிகள் பெற்றிருக்கும் அக்‌ஷர், 11வது இடத்தில் இருக்கிறார்.

பௌலர்கள் தரவரிசையில் இந்திய இடது கை வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் எட்டாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார். குவாலியரில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார் அவர். இரண்டாவது போட்டியிலும் அவர் ஒரு விக்கெட் எடுத்தார். அதன் விளைவாக அவர் 8 இடங்கள் முன்னேறியிருக்கிறார். இப்போது 642 புள்ளிகள் பெற்றிருக்கும் ஆர்ஷ்தீப் தான் இந்தப் பட்டியலில் இருக்கும் சிறந்த இந்தியர். அடுத்த இடத்தில் ரவி பிஷ்னாய் (12வது இடம்) இருக்கிறார். குல்தீப் யாதவ் 20வது இடம் பிடித்திருக்கிறார். இங்கிலாந்து ஸ்பின்னர் ஆதில் ரஷீத், ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் ஆகியோர் முறையே முதலிரு இடங்களைப் பிடித்திருக்கிறார்கள்.

பேட்ஸ்மேன்களுக்கான டி20 தரவரிசையில் யஷஷ்வி ஜெய்ஸ்வால் ஒரு இடம் கீழே இறங்கி ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார். சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் ஒன்பதாவது இடத்தில் தொடர்கின்றனர். ஆஸ்திரேலிய அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் முதலிடத்தில் நீடிக்கிறார். அணிகள் தரவரிசிசையில் 268 ரேடிங் புள்ளிகளுடன் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

ஸ்மிருதி மந்தனா

பெண்களுக்கான டி20 தரவரிசையில் இந்திய அணி இரண்டாவது இடத்தில் தொடர்கிறது. பேட்டர்களுக்கான பட்டியலில் ஸ்மிரிதி மந்தனா நான்காவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டிருக்கிறார். ஷெஃபாலி வர்மா 11வது இடத்தில் நீடிக்க, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 4 இடங்கள் முன்னேறி 12வது இடம் பிடித்திருக்கிறார். ஜெமீமா ராட்ரிக்யூஸ் 2 இடங்கள் கீழே இறங்கி 20வது இடம் பிடித்திருக்கிறார்.

பௌலர்களுக்கான தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்த தீப்தி ஷர்மா, இரண்டு இடங்கள் கீழே இறங்கி இப்போது நான்காவது இடம் பிடித்திருக்கிறார். அதேபோல் ராதா யாதவ் 3 இடங்கள் பின்தள்ளப்பட்டு 15வது இடத்தில் இருக்கிறார். ரேணுகா சிங் தாக்கூர் ஐந்தாவது இடத்தில் நீடீக்கிறார். ஆல்ரவுண்டர்கள் தரவரிசிசையில் தீப்தி ஷர்மாவை ஒரு இடம் பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடம் பிடித்திருக்கிறார் நியூசிலாந்தின் அமீலியா கேர். வெஸ்ட் இண்டீஸின் ஹேலி மேத்யூஸ், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி கார்ட்னர் முறையே முதலிரு இடங்களில் நீடிக்கிறார்கள்.