விளையாட்டு

“ஸ்விட்ச் ஹிட்டிங்கை ஐசிசி தடை செய்யவேண்டும்” - இயன் சேப்பல்

“ஸ்விட்ச் ஹிட்டிங்கை ஐசிசி தடை செய்யவேண்டும்” - இயன் சேப்பல்

EllusamyKarthik


பேட்ஸ்மேன்கள் ஸ்விட்ச் ஹிட்டிங் ஷாட் விளையாடுவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் வலியறுத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களான மேக்ஸ்வெல், வார்னர் ஆகியோர் இந்திய பவுலர்களை ஸ்விட்ச் ஹிட் முறையில் அட்டாக் செய்திருந்தனர். இந்நிலையில், இது பவுலர்களுக்கும், ஃபீல்டிங் செய்கின்ற அணிக்கும் எதிராக நடக்கின்ற அநீதி என சொல்லியிருக்கிறார் இயன் சேப்பல்.

வலது கை பேட்ஸ்மேன், இடது கை பேட்ஸ்மேனாகவோ அல்லது இடது கை பேட்ஸ்மேன், வலது கை பேட்ஸ்மேனாகவோ மாறி பந்தை அடிப்பதுதான் ஸ்விட்ச் ஹிட்.

“இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் ஆட்டம் அமர்க்களமாக உள்ளது. குறிப்பாக வார்னர், ஸ்மித், ஃபின்ச் மற்றும் மேக்ஸ்வெல் மாதிரியான பேட்ஸ்மேன்கள் அற்புதமாக விளையாடி தங்களது பேட்டிங் திறனை நிரூபித்துள்ளனர். மாடர்ன் டே கிரிக்கெட்டிற்கு ஏற்ப ஸ்விட்ச் ஹிட் முறையில் பல ஷாட்களை மேக்ஸ்வெல் விளையாடி உள்ளார். இருப்பினும் இது நல்லதற்கு அல்ல. 

பவுலர்கள் பந்து வீசுவதற்கு முன்னர் அது குறித்து அம்பயர்களிடம் சொல்லிவிட்டுதான் அதை செய்கிறார்கள். பேட்ஸ்மேனின் லெக் மூவ்மெண்ட்டிற்கு ஏற்ப பந்துகளை வீசுவது பவுலர்களின் வியூகம். ஆனால் பவுலர்கள் பந்தை ரிலீஸ் செய்தவுடன் ஸ்விட்ச் ஹிட் முறையில் கைகளை மாற்றியும், பொசிஷனை பேட்ஸ்மேன்கள் மாற்றுவதும் ஏற்புடையதல்ல. இந்த மாதிரியான ஷாட்களை பேட்ஸ்மேன்கள் ஆட ஐசிசி தடை விதிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார் சேப்பல். 

இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன், ஆஸ்திரேலியாவின் வார்னர் மற்றும் மேக்ஸ்வெல் இந்த ஷாட்களை ஆடுவதில் வல்லவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.