விளையாட்டு

டி20 உலகக்கோப்பை: சூரியகுமாரின் அதிரடியால் கவுரவமான ஸ்கோரை எட்டியது இந்திய அணி!

டி20 உலகக்கோப்பை: சூரியகுமாரின் அதிரடியால் கவுரவமான ஸ்கோரை எட்டியது இந்திய அணி!

JustinDurai

சூரியகுமாரின் பொறுப்பான ஆட்டத்தால் கவுரவமான ஸ்கோரை பெற முடிந்தது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றில் இன்று இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. பெர்த் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் லுங்கி என்கிடியின் வேகத்தில் இந்திய அணியின் முன்வரிசை பேட்ஸ்மேன்கள் நடையை கட்டினர். அபாரமாக பந்துவீசிய அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.   

ரோகித் சர்மா 9 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 15 ரன்களுடனும், விராட் கோலி 12 ரன்களுடனும், தீபக் ஹூடா ரன் எதுவும் எடுக்காமலும், ஹர்திக் பாண்டியா 2 ரன்களுடனும் வெளியேறி அதிர்ச்சியளித்துள்ளனர். 49 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறிக் கொண்டிருந்த இந்திய அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார் சூரியகுமார் யாதவ்.

அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியகுமார் 30 பந்துகளில் அரை சதம் கடந்தார்.  ஒருபுறம் விக்கெட்டுகள் மளமளவென சரிந்து கொண்டிருக்க, சூரியகுமாரின் அதிரடியால் இந்திய அணி கவுரவமான ஸ்கோரை எட்டியது. அவர் 40 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உடன் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி ஆடி வருகிறது. அபாரமாக பந்துவீசி வரும் அர்ஷ்தீப் சிங் தென்னாப்பிரிக்கா அணியின் குயின்டன் டி காக் (1 ரன்), ரிலீ ரோசோவ் (0 ரன்) ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறார்.