விளையாட்டு

“ஓவருக்கு 28 ரன்களை எப்படி எடுக்க முடியும்?” - ஐசிசி மீது குவியும் விமர்சனம்

webteam

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் மழைக்கு பின்னர் பாகிஸ்தான் அணி ஓவருக்கு 28 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற ஐசிசி-ன் முடிவை சிலர் விமர்சித்துள்ளனர்.

உலகக் கோப்பை தொடரின் 22வது போட்டி நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் பெட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 336 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் ரோகித் ஷர்மா அபார சதம் (140) விளாசினார். கேப்டன் கோலி 77 (65) ரன்களை குவித்தார்.

இதையடுத்து 337 என்ற கடினமான இலக்கை எதிர்த்து விளையாடிய பாகிஸ்தான் அணி தொடக்க விக்கெட்டை இழந்து தடுமாறியது. அதன்பின்னர் ஃபாகர் மற்றும் பாபர் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஃபாகர் 62 (75) மற்றும் பாபர் 48 (57) ரன்களில் விக்கெட்டை இழந்தனர். 35 ஓவர்கள் முடிவில் 166 ரன்கள் எடுத்திருந்த பாகிஸ்தான் 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. 

பின்னர் 5 ஓவர்கள் மட்டும் விளையாடலாம் என பாகிஸ்தான் அணி களமிறக்கப்பட்டது. ஆனால் கிரிக்கெட் விதிமுறைப்படி பாகிஸ்தான் அணி ஒரு ஓவருக்கு 28 ரன்கள் வீதம் என 5 ஓவர்களில் 136 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இலக்கை எட்டமுடியாத பாகிஸ்தான் 89 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. 

இந்நிலையில் ஐசிசி-ன் விதிமுறையை பிபிசி கிரிக்கெட் செய்தியாளர் ஜனாதன் ஆனிவ் விமர்சித்துள்ளார். அவர் கூறும் போது, “ஐசிசி அறிவிப்பு கேலிக்கூத்தாக உள்ளது. ஒரு முக்கிய தருணத்தில் இப்படி முடிவை கொடுத்தால் அவர்கள் எப்படி முன்னேறுவார்கள்” என்று கேள்வி எழுப்பியுள்ளார். பிசிசி ரேடியோ பேச்சாளர் ஸ்வான், “ஒரு ஓவருக்கு 28 ரன்களை எடுக்க சொன்னால் எப்படி முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.