icc ch. tro., bcci x page
விளையாட்டு

ICC சாம்பின்ஸ் டிராபி | இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லுமா? சிகப்பு கொடி காட்டியது பிசிசிஐ!

2025ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் வரை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பாகிஸ்தானிற்குச் சென்று விளையாடாது என பிசிசிஐ, இன்று உறுதியாக தெரிவித்துள்ளது.

Prakash J

இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் உள்விவகாரங்கள் மற்றும் இருநாடுகளுக்கு இடையே நீடிக்கும் பதற்றமான சூழல் காரணமாக, 2008 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்று எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. அதேசமயத்தில், இரு அணிகளுக்கும் இடையிலான இருதரப்பு தொடர்கள் கடைசியாக டிசம்பர் 2012ஆம் ஆண்டு முதல் ஜனவரி 2013 வரை இந்தியாவில் நடைபெற்றது. அதன்பிறகு அவர்கள் இருதரப்புத் தொடர்களில் விளையாடவில்லை. ஐசிசி மற்றும் ஆசியக் கோப்பை போன்ற மிகப்பெரிய தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் பொதுவான நாடுகளில் விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் வரை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இத்தொடரில் கலந்துகொள்ள இந்திய அணி பாகிஸ்தானிற்குச் செல்லாது என பிசிசிஐ, இன்று உறுதியாக தெரிவித்துள்ளது.

இத்தொடரில் விளையாட ஆரம்பம் முதலே இந்தியா மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்திய அணியின் போட்டிகளை மட்டும் வேறு இடங்களுக்கு மாற்றி வைக்குமாறு கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி செல்வது சாத்தியமில்லை என உறுதியாகி உள்ள பட்சத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது இலங்கையில் நடைபெற்றால் அதில் கலந்துகொள்ளும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ”ஒரு சமூகத்தின் துயரத்தை யாரும் கவனிக்கவில்லை” - ‘அமரன்’ குறித்து கோபி நயினார் காட்டமான விமர்சனம்!