கிரிக்கெட் உலகில் ஆண்களுக்கு நிகராக, பெண்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அவர்களும் பலவித சாதனைகளைப் படைத்துவருகின்றனர். குறிப்பாக, மகளிர் அணி, ஆடவர் அணிக்கு நிகராக பல வெற்றிகளைப் படைத்து சாதனை பட்டியலில் இடம்பிடித்து வருகிறது.
அதேநேரத்தில், ஆடவர் அணிக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து நீண்டநாட்களாக விமர்சனம் எழுந்துவந்தது. இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடவருக்கு இணையாக மகளிருக்கும் இணையான பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஐசிசி வெளியிட்டிருக்கும் ஓர் அறிக்கையில், ”ஆண் விளையாட்டு வீரர்கள் பெறும் அதே அளவிலான பரிசுத் தொகையைப் பெண்களும் பெறவிருக்கும் முதல் போட்டியாக ஐசிசி பெண்கள் டி20 உலகக் கோப்பை 2024 இருக்கப்போகிறது. இது விளையாட்டு வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளது.
ஐசிசி ஆண்டுதோறும் நடத்தும் மாநாட்டில் ஜூலை 2023-இல் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், 2030ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட இருந்தத் திட்டத்தை 7 ஆண்டுகளுக்கு முன்பாகவே செயல்படுத்தியதாகவும் ஐசிசி கூறியுள்ளது. ஐசிசியின் இந்த நடவடிக்கை பெண்கள் விளையாட்டுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும், 2032 ஆம் ஆண்டுக்குள் இதனை விரிவுபடுத்தும் நோக்கிலும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்மூலம், பெண்கள் டி20 உலகக்கோப்பைப் போட்டிகளில் வெற்றிபெறும் அணிக்கு ஏறத்தாழ ரூ. 20 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். கடந்த 2023-இல் தென்னாப்ரிக்காவில் நடைபெற்ற பெண்கள் டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று ஏறத்தாழ ரூ.8.3 கோடி பரிசுத்தொகையாக பெற்றது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தொகை, அதைவிட 134 சதவீதம் அதிகமாகும். மேலும், போட்டியில் இரண்டாவதாக வரும் அணிக்கு ஏறத்தாழ ரூ.10 கோடி பரிசுத்தொகை வழங்கவுள்ளதாகவும், கடந்த டி20 உலகக்கோப்பையில் இரண்டாவதாக வந்த தென்னாப்ரிக்க அணி ஏறத்தாழ ரூ. 4 கோடி பரிசுத்தொகை பெற்றது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தொகை அதைவிட 134 சதவீதம் அதிகமாகும். அரையிறுதிகளில் தோற்கும் இரு அணிகளுக்கும் சேர்த்து ஏறத்தாழ ரூ.5.6 கோடி பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளதாகவும் (கடந்த 2023-இல் ஏறத்தாழ ரூ. 1.75 கோடி பரிசுத்தொகை), மொத்த போட்டிகளின் பரிசுத்தொகை ஏறத்தாழ ரூ. 66 கோடி வரை வழங்கப்படவுள்ளதாகவும், இது கடந்த உலகக்கோப்பையைவிட 225 சதவீதம் அதிகமென்றும் கூறப்படுகிறது. அதேபோல, அரையிறுதிக்கு தகுதிபெறாத அணிகளுக்கும், தொடக்கநிலைப் போட்டிகளில் விளையாடும் அணிகளுக்கும் முறையே தனித்தனியாக பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
10 அணிகள் மோதும் 9வது ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3ஆம் தேதி தொடங்க இருக்கிறது குறிப்பிடத்தக்கது.