விளையாட்டு

பும்ரா அதற்கு சரிபட்டு வரமாட்டார்: வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கணிப்பு

பும்ரா அதற்கு சரிபட்டு வரமாட்டார்: வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கணிப்பு

webteam

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இதையடுத்து 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் மூன்று டி20 போட்டியிலும் பங்கேற்கிறது. இந்தப் போட்டிகளுக்குப் பின் இங்கிலாந்து சென்று விளையாடுகிறது.  

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான், மைக்கேல் ஹோல்டிங், விராத் கோலியையும் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் விவியன் ரிச்சர்ட்சையும் ஒப்பிட்டு பேட்டியளித்துள்ளார். 

அதில், ’தென்னாப்பிரிக்க தொடரில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டார்கள். ஆனால், பேட்ஸ்மேன்களின் தவறால் தோல்வியை சந்திக்க நேரிட்டது. இந்தப் போட்டியை அடுத்து இங்கிலாந்தில் சென்று இந்திய அணி விளையாட இருக்கிறது. அங்குள்ள பிட்ச், தென்னாப்பிரிக்க பிட்ச்-சை விட வித்தியாசமாக இருக்கும். அதனால் அங்கு, பும்ராவின் பந்து எடுபடாது. வலது கை பேட்ஸ்மேன்களுக்கு புதிய பந்தில் வீசும்போது அவர் திணறுகிறார். தென்னாப்பிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பந்தை அவர் அழுத்தமாக பிட்ச் செய்தார். இதனால் பந்து எந்த உயரத்தில் எகிறது என்பதை கணிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் அவுட் ஆகினர். இதனால் அவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால், இங்கிலாந்தில் அப்படி செய்ய முடியாது. அங்கு எனது முதல் சாய்ஸ் புவனேஷ்வர் குமார்தான். பிறகுதான் இஷாந்த் சர்மா, ஷமி ஆகியோரை யோசிப்பேன்.

விராத் கோலி இப்போது, இளம் கேப்டன். சிறந்த கேப்டனாக உருவாகுவது பற்றி அவர் புரிந்து வருகிறார். ஆடுகளத்தில் ஆக்ரோஷமாக இருக்கிறார். இந்த ஆக்ரோஷம், சில நேரம் எதிரணியை மட்டுமல்ல, சொந்த அணியினருக்கே அச்சுறுத்தலாக மாறும். விவியன் ரிச்சர்ட்ஸும் கேப்டன் பொறுப்பில் இருந்த போது, முதலில் ஆக்ரோஷமாக செயல்பட்டார். பின் அனுபவத்தின் அடிப்படையில் அமைதியை கடைப்பிடித்தார். விவியனை போல் அமைதியாக செயல்படுவதை கற்றுக்கொள்ளும் நிலையில் விராத் இருக்கிறார்’ என்று கூறியுள்ளார்.