விளையாட்டு

“அரசு உதவியிருந்தால் தங்கம் வென்றிருப்பேன்” - கெஜ்ரிவாலை விளாசிய திவ்யா

“அரசு உதவியிருந்தால் தங்கம் வென்றிருப்பேன்” - கெஜ்ரிவாலை விளாசிய திவ்யா

webteam

அரசு மட்டும் உதவி செய்திருந்தால் ஆசிய போட்டிகளில் தங்கம் வென்றிருப்பேன் என டெல்லி முதலமைச்சரிடம் வெண்கலப் பதக்கம் வென்ற திவ்யா கக்ரான் தெரிவித்துள்ளார். 

ஆசிய விளையாட்டுப்போட்டி 2018 இல் தைபே நாட்டை சேர்ந்த சென் வென்லிங்கை வீழ்த்தி மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை திவ்யா வெண்கலப்பதக்கம் வென்றார். அவரை சிறப்பிக்கும் வகையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் டெல்லியின் தலமைச்செயலாளர் ஆகியோர் நேரில் சந்தித்தனர். அப்போது அவர்களிடம் பேசிய திவ்யா, “மாநில அரசு எனக்கு உதவி செய்திருந்தால் நான் கண்டிப்பாக தங்கம் வென்றிருப்பேன். எனக்கு உதவி தேவைப்பட்டபோது யாருமே உதவவில்லை. பதக்கம் வெல்லும் வரையிலும் எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை” என்று கூறினார்.

அத்துடன், “நான் ஏற்கெனவே காமன் வெல்த் போட்டியில் பதக்கம் வென்றேன். அப்போது நீங்கள் என்னை அழைத்து தேவையான உதவிகள் செய்வதாகக் கூறினீர்கள். பின்னர் ஆசிய போட்டிகளுக்கு தயாரானபோது, பல மனுக்களை அளித்து உங்கள் அரசிடம் கோரிக்கை விடுத்தேன். ஆனால் ஒரு உதவி கூட கிடைக்கவில்லை. யாரும் அழைத்து பேசக்கூட இல்லை. எனக்கு மல்யுத்தத்தில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் உள்ளது. நீங்கள் மட்டும் உதவினால், நான் சிறப்பாக சாதிப்பேன். ஹரியானா மாநிலத்தை பாருங்கள் எத்தனை பதக்கங்களை வென்றுள்ளனர். ஏனெனில் அங்கிருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு அவர்கள் மாநில அரசு உதவுகிறது. ஏழைக் குழந்தைகளுக்கு முதலில் உதவுங்கள்” என்றார். 

திவ்யா கூறியது முழுவதையும் பொறுமையாக கேட்ட கெஜ்ரிவால், “டெல்லி அரசின் விளையாட்டுத்துறையில் பல குறைபாடுகள் உள்ளது. அவற்றை சீரமைக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். நீங்கள் செய்தித்தாள்களை படித்தால் நாங்கள் பணி செய்வதில் எத்தனை தடைகள் இருக்கிறது என்பது உங்களுக்கு புரியும். எங்களது கொள்கைகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு உயர் அதிகாரி அல்லது மற்றொரு உயர் பொறுப்பில் இருப்பவர் அதை தடுத்துவிடுகிறார்” எனக் கூறினார்.