ராஜஸ்தான் அணிக்காக நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடி வருகிறார் இங்கிலாந்து நாட்டின் அதிரடி பேட்ஸ்மேன் பட்லர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில் 48 பந்துகளில் 70 ரன்களை குவித்து ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றிருந்தார். இந்நிலையில் அணியின் தேவைக்கு ஏற்ப எந்த பொசிஷனிலும் இறங்கி சந்தோஷமாக பேட் செய்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக இன்னிங்க்ஸை ஓப்பன் செய்த பட்லர், கடந்த சில ஆட்டங்களாக மிடில் ஆர்டரில் விளையாடி வருகிறார்.
“இன்னிங்க்ஸை ஓப்பன் செய்வதிலிருந்து மிடில் ஆர்டரில் ஆடுகின்ற அனுபவம் முற்றிலும் மாறுபட்டுள்ளது. மிடில் ஆர்டரில் விளையாடும் போது களத்தில் அதற்கு முன்னதாக நடந்ததற்கு ஏற்ப நாம் ஆட்டத்தில் ரியாக்ட் செய்ய வேண்டியுள்ளது.
இந்த இரண்டு பொசிஷனிலும் விளையாடுவதில் எனக்கு திருப்தி தான். அணிக்கு எனது ஆட்டம் எங்கு தேவைப்படுகிறதோ அங்கு இறங்கி அந்த டாஸ்க்கை சந்தோஷமாக செய்கிறேன்.
சி.எஸ்.கேவுடனான ஆட்டத்தில் வலுவான பார்ட்னர்ஷிப் அமையாதது தான் சற்று பின்னடைவு ஏற்பட காரணம். இருப்பினும் முதலில் அமைதியாக அடக்கி வாசித்து ஆட்டத்தை எங்கள் பக்கமாக திருப்பினோம். அதே போல எங்கள் அணி ஃபீல்டிங்கிலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இந்த சூழலில் பட்லரை சென்னை அணிக்காக விளையாட வைக்க வேண்டும் என சென்னை ரசிகர்கள் சிலர் தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். தோனியின் டி-சர்ட்டை பட்லர் வாங்கிக் கொண்ட நிலையில் சென்னை அணி ரசிகர்களின் மனதை அவர் வென்றிருக்கிறார்.