உக்ரைன் மீது படையெடுத்து போரிட்டு வருகிறது ரஷ்யா. இந்த நிலையில் பல உலக நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பல்வேறு தடைகளை அமல் செய்து வருகின்றன. சில நிறுவனங்களும் தங்களது சேவையை ரஷ்யாவுக்கு வழங்குவதை நிறுத்திக் கொண்டுள்ளன. இந்த நிலையில் டென்னிஸ் விளையாட்டு வீரர் ஆண்டி முர்ரே போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் குழந்தைகளுக்கு உதவும் வகையில் அடுத்ததாக நடைபெற உள்ள 2022 சீசனுக்கான தொடர்களில் விளையாடுவதன் மூலம் தனக்கு கிடைக்கும் பரிசுத் தொகையை வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.
“உக்ரைன் நாட்டில் சுமார் 7.5 மில்லியன் குழந்தைகள் உக்ரைன்-ரஷ்யா போரினால் ஆபத்தில் உள்ளனர். அதனால் UNICEF அமைப்புடன் இணைந்து அவசர கால மருத்துவத்திற்கு தேவைப்படும் மருந்து சப்ளை மற்றும் குழந்தைகள் வளர்ச்சிக்கு தேவைப்படும் கிட்களை (Kits) வழங்க உள்ளேன். போரினால் இடம் மாறியுள்ள குழந்தைகளுக்கு அவசியமானதாக கருதப்படும் கல்வி கற்பதற்கான வசதி மற்றும் போரினால் பதிக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
இந்த ஆண்டில் அடுத்ததாக நான் விளையாட உள்ள தொடர்களில் கிடைக்கும் பரிசுத் தொகையை உக்ரைன் குழந்தைகளுக்கு நன்கொடையாக UNICEF மூலம் வழங்க உள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் நன்கொடை அளித்து உதவலாம்” என தெரிவித்துள்ளார் ஆண்டி முர்ரே.