விளையாட்டு

’ஆர்சிபி ரசிகர்களுக்கு என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்’ - தினேஷ் கார்த்திக் உருக்கம்!

’ஆர்சிபி ரசிகர்களுக்கு என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்’ - தினேஷ் கார்த்திக் உருக்கம்!

ச. முத்துகிருஷ்ணன்

ஐபிஎல் 2022 சீசனில் 2வது தகுதிச் சுற்றில் தோல்வியுற்றபிறகு ஆர்சிபி ரசிகர்களுக்கு என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று தினேஷ் கார்த்திக் உருக்கமாக பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் பல அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய தினேஷ் கார்த்திக் இந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார். ஐபிஎல் மெகா ஏலத்தில் தினேஷ் கார்த்திக்கை ரூ 5.50 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியது. நடப்பு சீசனில் ஆர்சிபி அணிக்காக சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தியதன் மூலம், பிளேஆஃப்களுக்குத் தகுதி பெறுவதில் முக்கியப் பங்கு வகித்தார் தினேஷ் கார்த்திக்.

இருப்பினும், 2வது தகுதிச் சுற்றுப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் தோற்றதைத் தொடர்ந்து, முதல் ஐபிஎல் பட்டத்தை வெல்லும் ஆர்சிபியின் “ஈ சாலா கப்” கனவு தகர்ந்து போனது. இந்நிலையில் ஆர்சிபி ரசிகர்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று ஆர்சிபியின் அதிகாரப்பூர்வ யூடியூப் ஹேண்டில் வெளியிட்ட வீடியோவில் தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார்.

அந்தப் வீடியோவில் “நான் பல அணிகளில் அங்கம் வகித்துள்ளேன். ஆனால் இதுவே நான் அங்கம் வகிக்கும் சிறந்த ரசிகர் பட்டாளம். ஏனென்றால் மைதானத்தில் நான் பெற்ற மகிழ்ச்சியை வேறு எங்கும் நான் பெற்றதில்லை. உங்களைப் போன்ற ரசிகர்களுக்கு நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ட்விட்டர், இந்த எல்லா இடங்களிலும் வரும் ரசிகர்கள் நேர்மறையான எண்ணங்களை விதைக்கின்றனர். அடுத்த சீசனில் கோப்பையை வெல்ல நாங்கள் கடுமையாக முயற்சிப்போம்” என்று கூறினார் தினேஷ் கார்த்திக்.