இந்திய அணியுடனான கிரிக்கெட் தொடரின்போது அந்த அணி வீரா்கள் வார்த்தைப் போரில் ஈடுபட முயன்றாலும் அதைப் புறக்கணிக்கவே விரும்புகிறேன் என்று ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரை முடித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர். அதற்காக அவர்கள் ஆஸ்திரேலியா சென்றுள்ளனர். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வருகிற 27-ம் தேதி சிட்னியில் நடக்கிறது.
இதுகுறித்து டேவிட் வார்னர் கூறும்போது " இப்போது 34 வயதை எட்டியுள்ள நிலையில், சா்வதேச கிரிக்கெட்டில் எனக்கான இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். எனவே வார்த்தைப் போரில் ஈடுபடுவதை தொடர விரும்பவில்லை. இந்தியாவுக்கு எதிரான தொடரின்போது அந்த அணி வீரா்கள் வார்த்தைப் போரில் ஈடுபட்டாலும் அதை புறக்கணிக்கவே விரும்புகிறேன்.அவ்வாறு வார்த்தைப் போரில் ஈடுபடாமல் இருப்பதற்காக கடந்த ஆண்டுகளில் கற்றுக் கொண்டு வந்துள்ளோம்" என்றார்.
மேலும் "எதிரணியினர் அவ்வாறு வார்த்தைப் போரில் ஈடுபட்டாலும், அதற்கு வார்த்தைகளால் பதில் கூறாமல் பேட்டை பயன்படுத்தி ரன்களை குவிப்பதன் மூலம் பதில் கூறலாம். மேலும் வார்த்தைப் போரில் ஈடுபடுவது நமது அணியினரிடையே எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதும் முக்கியமானதாகும். அந்த வகையில் சற்று கண்ணியத்துடன் நடந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். ஒரு தந்தையாக இருப்பதன் மூலம் பொறுமையை கடைப்பிடிக்கக் கற்றுக் கொண்டுள்ளேன்" என்றார் வார்னர்.
தொடர்ந்து பேசிய அவர் " அது களத்திலும் எனக்கு உதவுகிறது. என்னைப் பொருத்தவரை ஒருநாள் போட்டிகளில் நல்லதொரு வலுவான ஸ்டிரைக் ரேட்டை கடைப்பிடிக்க முயற்சிக்கிறேன். கடந்த 12 முதல் 24 மாதங்களில் எனது ஆட்டம் மேம்பட்டுள்ளதற்காக மகிழ்ச்சியடைகிறேன். மூத்த வீரராக முதிர்ச்சியடையும்போது, ஆட்டத்தில் ஒரு ஒழுக்கத்தை கொண்டுவரும்போது நமது ஆட்டம் மேம்படுகிறது. இந்திய அணியைப் பொருத்தவரை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரோஹித் சா்மா விளையாடாதது இந்திய அணிக்கு பாதிப்புதான் என்றாலும், விராட் கோலி தலைமையிலான அணி அதை மிகத் திறம்பட கையாளும்" என்றார் டேவிட் வார்னர்.