உலகக் கோப்பையை வெல்வது எங்கள் அனைவருடைய கனவு, எனக்கு அனைத்து கோப்பைகளையும் வெல்ல வேண்டும் என்று இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தாண்டு நடைபெறவிருந்து ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். ஆனாலும் சமூக வலைத்தளத்தில் படு ஆக்டிவாக இருக்கின்றனர் இந்திய கிரிக்கெட் வீரர்கள். இந்நிலையில் "இந்தியா டுடே" இணையதளம் மூலம் ரோகித் சர்மாவிடம் நேர்காணல் நடத்தியது. அதில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அப்போது பேசிய அவர் " உலகக் கோப்பையை வெல்வது அணி வீரர்கள் ஒவ்வொருவரின் கனவு. எனக்கு உலகக் கோப்பையை வெல்ல வேண்டும். எப்போதெல்லாம் ஆடுகளத்திற்கு செல்கிறோமே அப்போதெல்லாம் வென்றாக வேண்டும். ஆனால் உலகக் கோப்பை என்பது அனைத்துல போட்டிகளை காட்டிலும் மேலானது, எனவேதான் அதனை நான் பெரிதும் விரும்புகிறேன். அனைத்து உலகக் கோப்பைகளையும் வெல்ல ஆசைப்படுகிறேன்" என்றார்.
இந்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை குறித்துப் பேசிய ரோகித் சர்மா "இப்போதுள்ள சூழ்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடர் எப்போதும் நடைபெறும் என கூற முடியாது. எனக்கு தெரிந்த வரை அக்டோபரில்தான் டி20 உலகக் கோப்பை நடைபெற இருக்கிறது. அதற்கு இன்னமும் நிறைய நேரம் இருக்கிறது. அதனால் போட்டிக்கு தயாராவதற்கும் நேரம் நிறைய இருக்கிறது. நான் எப்போது களத்தில் இறங்கி விளையாடலாம் என காத்துக்கொண்டு இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.