விளையாட்டு

“இளைஞர்களுக்கு வழி கொடுக்க விரும்புகிறேன்”-கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அஸ்கர் ஆப்கான்

“இளைஞர்களுக்கு வழி கொடுக்க விரும்புகிறேன்”-கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அஸ்கர் ஆப்கான்

EllusamyKarthik

‘அஸ்கர் ஆப்கான்’ ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் திடீரென நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் நமீபியா அணிக்கு எதிரான ஆட்டத்துடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

33 வயதான அவரது திடீர் ஓய்வு முடிவு ஆப்கான் நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நமீபியா மற்றும் ஆப்கான் வீரர்கள் அவரது திறனை பாராட்டும் விதமாக கெளரவம் கொடுத்திருந்தனர்.  

“வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக இந்த முடிவை எடுத்துள்ளேன். இது இளம் வீரர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும். ஓய்வுக்கான காரணம் குறித்து பலரும் கேட்ட வண்ணம் உள்ளனர். அதற்கான விளக்கம் கொடுப்பது மிகவும் கடினம். கடந்த போட்டி மிகவும் எங்களுக்கு கடினமாக இருந்தது. அதனால் தான் இந்த நிலையில் கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுகிறேன். 

மனதில் இருந்து நீக்க முடியாது நினைவுகள் நெஞ்சில் புதைந்துள்ளன. ஓய்வு முடிவு மிகவும் கடினமான ஒன்று. என்னை கிரிக்கெட் விளையாட்டின் லெஜெண்டுகள் பார்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நான் ஓய்வு பெற்றாக வேண்டும்” என நமீபியா அணிக்கு எதிரான ஆட்டத்தின் இன்னிங்ஸ் இடைவேளையின் போது சொல்லி இருந்தார் அஸ்கர் ஆப்கான். 

ஆப்கானிஸ்தான் அணிக்காக 6 டெஸ்ட், 114 ஒருநாள் மற்றும் 74 டி20 போட்டிகளில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார் அஸ்கர். நாட்டின் மீது கொண்ட பற்றினால் தனது பெயருடன் ‘ஆப்கான்’ என்பதை சேர்த்துக் கொண்டார். தனது கடைசி போட்டியில் 23 பந்துகளில் 31 ரன்களை எடுத்தது அவுட்டானார் அவர்.