டிவில்லியர்ஸ் ஆட்டத்தைப் பார்த்தபோது சேஸிங் செய்வது கடினம் என நினைத்தேன் என்று சிஸ்கே கேப்டன் தோனி கூறினார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் நேற்று மோதின. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய பெங்களூரு அணியில் கோலி 18 ரன்களில் வெளியேறினார். பின்னர் குயின்டன் டி காக்கும், டி வில்லியர்ஸ்-யும் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். டி காக் 53 ரன்களும், டி வில்லியர்ஸ் 68 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது.
கடின இலக்கை நோக்கிக் களமிறங்கிய சென்னை அணி தடுமாறியது. வாட்சன், சாம் பில்லிங்ஸ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் தோனி, தொடக்க வீரர் ராயுடுவுடன் இணைந்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.
53 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உதவியுடன் 82 ரன்கள் விளாசிய ராயுடு, 18ஆவது ஓவரில் விக்கெட்டை இழந்தார். சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டன. பிராவோ-வும், தோனியும் சிக்ஸர் விளாச, 2 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே சென்னை அணி வெற்றியை வசமாக்கியது.34 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் விளாசிய தோனி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 6 போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றி பெற்றுள்ள சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
வெற்றிக்குப் பின் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, கூறும்போது, ‘டிவில்லியர்ஸின் ஆட்டத்தையும் ஸ்கோர் 200- ஐ தாண்டியதையும் பார்த்தபோது வெற்றி பெறுவது கடினம் என்றுதான் நினைத்தேன். எங்கள் வீரர்கள் சிலர் தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்துவிட்டார்கள். ஆனால், இந்த மைதானம் சிறியது. அதனால் பந்து எளிதாக பறந்தது. மைதானத்தில் அதிகப் பனி இல்லை. கொஞ்சம் இருந்தது. ஒட்டு மொத்தமாக, நாங்கள் நினைத்தபடி நடக்கவில்லை என்றாலும் நல்லபடியாகவே போட்டி முடிந்தது. டிவில்லியர்ஸ் ஸ்பின்னர்களுக்கு எதிரான நன்றாக ஆடினார்.
சேஸிங்கின்போது, எந்த பந்துவீச்சாளர் அடுத்து இறங்குவார், எந்த பந்துவீச்சாளருக்கு எத்தனை ஓவர் மீதமிருக்கிறது, கேப்டன் அடுத்து யாரை பந்துவீச வைப்பார் என்பதை கவனிப்பது முக்கியம். சில போட்டிகளில் வெற்றி பெறலாம், சில போட்டிகளில் முடியாமல் போகலாம். ஆனால் ஆட்டத்தை முடிப்பவர்கள் இளம் வீரர்களுக்கு உதவ வேண்டும். தங்கள் அனுபவங்களை அவர்களுடன் பகிரிந்துகொள்ள வேண்டும். இதெல்லாம் முக்கியம், ஏனென்றால் நாளை நான் விளையாடாமல் கூட போகலாம். இந்த அனுபவத்தை வைத்து அவர்கள் விளையாட வேண்டும். இந்தப் போட்டியிலும் ராயுடு சிறப்பாக விளையாடினார். அவர்தான் ஸ்கோர்போர்டில் ரன்கள் உயர்ந்துகொண்டே இருக்க காரணமாக இருந்தார். இது சின்ன மைதானம் என்பதால் அவருக்கு ஏற்றதாக அமைந்தது’ என்றார்.