yuvraj - harbajan Twitter
விளையாட்டு

”புற்றுநோயால் அவர் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்; எங்களுக்கு தெரியவேயில்லை”- யுவராஜ் குறித்து ஹர்பஜன் உருக்கம்!

"எனக்கு மயக்கம் ஏற்பட்டு சரிந்து விழுந்துவிட்டால், அப்போது மட்டும் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள். அதுவரை நான் விளையாட விரும்புகிறேன்" என்று நடுவரிடம் யுவராஜ் சிங் கூறினார்.

Rishan Vengai

புற்றுநோயை வென்றவர்களில் யுவராஜ் சிங் என்ற பெயர் தான் எப்பொழுதும் இருக்கும்!

புற்றுநோய், இந்த பெயரைக் கேட்டாலே அனைவரின் உள்ளமும் நடுங்கும். உயிர்குடிக்கும் இந்த கொடுமையான நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரால் மட்டும் தான், அதன் உண்மையான வலியை புரிந்து கொள்ள முடியும். கொடிய அரக்கனான புற்றுநோய்க்கு முன்னால் பலபேர் தங்களது உயிரையும், வாழ்க்கையையும் விட்டுக்கொடுத்திருக்கிறார்கள். ஆனால் புற்றுநோயையே எதிர்த்து போராடி, அதனை வென்று வாழ்பவர்கள் என்றால் சிலர்தான் இருக்கிறார்கள். அப்படி இந்த கொடிய நோயை முறியடித்தவர்களின் பெயர்களில், இந்தியாவின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங்கின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

Yuvraj

2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பைகளை இந்திய அணி கையில் ஏந்துவதற்கான போராட்டத்தில் முதல் வீரராக நின்றவர்களில் யுவராஜ் சிங் முக்கியமானவர். என்ன தான் கோப்பைகளை வென்றதற்கு தோனியின் பெயர் எங்கும் முன்னிறுத்தப்பட்டாலும், அதனை சாத்தியமாக்கியவர்களின் பெயர் பட்டியலில் யுவராஜ் சிங் என்ற வீரனின் பெயர் தான் முதலில் பொறிக்கப்பட்டிருக்கும்.

வலியோடு ரத்த வாந்தி எடுத்து விளையாடிய யுவராஜ்!

உலகக்கோப்பை போட்டிகளில் இருமிக்கொண்டு வலியோடு விளையாடிய யுவராஜ் சிங், வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரத்த வாந்தி எடுத்தார். ரத்த வாந்தி எடுத்தும் தொடர்ந்து விளையாடிய அவர், அந்த போட்டியில் சதத்தை பதிவு செய்து இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தருவார். அப்படி உயிரைக்கொடுத்து ஒரு வீரர் நாட்டிற்காக தன்னை அர்ப்பணித்ததால் தான், இந்திய அணியால் 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை கையில் ஏந்த முடிந்தது.

Yuvraj singh

யுவராஜ் சிங் விட்டுச்சென்ற மிடில் ஆர்டர் என்ற அந்த இடம், இன்னமும் இந்திய அணியால் நிரப்பப்படாமல் தான் இருந்து வருகிறது. நிரப்பப்படவில்லை என்று சொல்வதற்கு பதிலாக, அவருக்கான மாற்றுவீரரே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒருவேளை யுவராஜ் சிங்கிற்கான மாற்றுவீரர் இந்திய அணிக்கு கிடைத்திருந்தால், நிச்சயம் 2019 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியை தழுவி இருந்திருக்காது. அப்படி மீண்டும் நிரப்பவே படமுடியாத ஒரு வீரன் தான் யுவராஜ் சிங்.

உலகக்கோப்பையை வெல்ல வேட்கையோடு இருந்த யுவராஜ்!

வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான போட்டியில் தான் யுவராஜ் சிங் ரத்த வாந்தி எடுத்தார். அப்போது அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. அப்போது போட்டியின் நடுவராக இருந்த சைமன் டஃபல் யுவராஜ்-இடம் சென்று நீங்கள் மைதானத்தில் இருந்து வெளியேற விரும்பினால் செல்லுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு பதிலளித்து பேசிய யுவராஜ், "எனக்கு மயக்கம் ஏற்பட்டு சரிந்து விழுந்துவிட்டால், அப்போது மட்டும் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள். அதுவரை நான் விளையாட விரும்புகிறேன்" என்று கூறினார். அந்த போட்டியில் அவர் 113 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

Yuvraj

யுவராஜ் சிங் இந்திய அணிக்காக உலகக் கோப்பையை எவ்வளவு தீவிரமாக வெல்ல விரும்பினார் என்றால் உங்களால் அதை நம்பவே முடியாது. உலகக்கோப்பை இறுதி போட்டிக்கான முந்தைய இரவில் யுவராஜ் சிங் தூங்குவதில் சிக்கல் இருந்தது. அப்போது அவருக்கு தூக்க மாத்திரைகள் கொடுக்க இந்திய அணியின் பிசியோ நிதின் படேல் யுவராஜ் அறைக்கு சென்றார். ​​அப்போது அவரிடம் யுவராஜ் இதைத்தான் சொன்னாராம், “அந்த கடவுள் என்னிடம் இருந்து என்ன வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும். என் உயிரைப் பறிக்கட்டும், எனக்கு அதிகமான வலியை கொடுக்கட்டும், ஆனால் கடவுளே, எங்களுக்கு உலகக் கோப்பையைக் கொடுங்கள்” என்று கூறியுள்ளார்.

அவருடைய நிலைமை தெரியாமல் கிண்டல் செய்து கொண்டிருந்தோம்! -ஹர்பஜன்

இந்நிலையில் யுவரஜ் சிங் கேன்சரோடு போராடிய நாட்கள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் ஹர்பஜன் சிங். யுவராஜ் சிங் குறித்து பேசியிருக்கும் ஹர்பஜன், “ யுவராஜ் சிங்கின் உடல்நிலை அப்போது மிகவும் சரியில்லாமல் இருந்தது. அவருடைய முகம் கவலையோடு எப்போதும் சோகமாகவே இருக்கும். பேட்டிங் செய்யும் போது கூட களத்திலேயே அவருக்கு அதிகமாக இருமல் ஏற்படும். தொடர்ச்சியாக இருமல் வரும்போது, நான் அவரிடம் ‘ஏன் இவ்வளவு இருமல் வருகிறது? உன்னுடைய வயதிற்கும், இதற்கும் எதாவது சம்பந்தம் இருக்கிறதா?’ என திட்டியிருக்கிறேன்.

Yuvraj

அவர் உடல்நிலையை சரிசெய்வதற்காக என்ன செய்து கொண்டிருந்தார் என்று எங்களுக்கு தெரியாது. புற்றுநோயோடு தான் அவர் உலகக்கோப்பையில் விளையாடினார். நாங்கள் அவருடைய நிலைமை என்னவென்று தெரியாமல் கேலி செய்திருக்கிறோம். ஆனால் அதற்கு பிறகு தான் எங்களுக்கு எல்லாம் தெரியவந்தது. சாம்பியனுக்கு வாழ்த்துக்கள்” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸோடு ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

2011 Worldcup

மேலும், “ஒருமுறை அல்ல இரண்டு முறை உலகக் கோப்பையை வெல்ல அவர் இந்திய அணிக்கு உதவியுள்ளார். யுவராஜ் சிங் இல்லாவிட்டால் 2011 உலகக் கோப்பையை இந்தியா வென்றிருக்காது என்று நான் நினைக்கிறேன். யுவராஜ் போன்ற ஒரு வீரர் கடந்த காலத்திலும் இல்லை, இப்போதும் இல்லை. அவரை போன்ற வீரர்கள் எல்லாம் தனித்துவமானவர்கள் ”என்று ஹர்பஜன் மேலும் கூறினார்.