''தேசிய கீதம் ஒலிக்கையில் எனக்கு என் அப்பா நினைவுக்கு வந்துவிட்டார். அது என்னை உணர்ச்சிபூர்வமாக மாற்றிவிட்டது. அதனால்தான் அழுதுவிட்டேன்'' எனத் தெரிவித்துள்ளார் சிராஜ்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. முதல்நாள் போட்டியில் ஆஸ்திரேலியா 166ரன்களுக்கு 2 விக்கெட்டை பறிகொடுத்துள்ளது.
போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு நாடுகளின் தேசிய கீதம் ஒலிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். இன்று இந்தியாவின் தேசிய கீதம் ஒலிக்கையில் பந்துவீச்சாளர் சிராஜ், தன்னை மீறி கண் கலங்கினார். தேசிய கீதம் ஒலிக்க ஒலிக்க சிராஜுக்கு கண்ணீர் வழிந்தோடியது. பின்னர் கைகளால் கண்ணீரைத் துடைத்துக்கொண்ட சிராஜ் உற்சாகமாக விளையாடத் தொடங்கினார். அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
இன்றைய முதல் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தியதும் சிராஜ் தான். தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய வார்னர் 5 ரன்களில் முகமது சிராஜ் பந்தில் விக்கெட்டை பறிக்கொடுத்தார். இந்நிலையில் தேசிய கீதம் ஒலிக்கையில் எனக்கு என் அப்பா நினைவுக்கு வந்துவிட்டார். அது என்னை உணர்ச்சிபூர்வமாக மாற்றிவிட்டது. அதனால்தான் அழுதுவிட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா தொடருக்கு இந்திய அணி சென்றடைந்தபோதுதான் சிராஜின் தந்தை காலமானார். தந்தையின் இறப்புக்குக் கூட வராமால் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடும் சிராஜ்,'நான் கிரிக்கெட் விளையாடினால் தான் அப்பாவுக்கு பிடிக்கும். இந்தத் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை வெற்றி பெற செய்து, அந்த வெற்றியை அப்பாவுக்கு அஞ்சலியாக செலுத்துவேன் ' என சிராஜ் உறுதி ஏற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.