விளையாட்டு

இந்தியாவிற்காக துடிக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள் - அதிரும் ட்விட்டர் பதிவுகள்

இந்தியாவிற்காக துடிக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள் - அதிரும் ட்விட்டர் பதிவுகள்

rajakannan

உலகக் கோப்பை தொடரில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி பிர்மின்காமில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. முதல் 17 ஓவர்கள் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 124 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. பேரிஸ்டோவ், ராய் இருவரும் அரைசதம் அடித்தனர்.

இந்நிலையில், இந்திய அணியின் வெற்றிக்காக பாகிஸ்தான் ரசிகர்கள் வேண்டிக் கொண்டிருக்கிறார். இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் அணியின் மொத்த ரசிகர் பட்டாளமும் சமூக வலைத்தளங்களில் களமிறங்கியுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் தங்களை விராட் கோலி மற்றும் தோனியின் ரசிகர்களாக வெளிப்படுத்தியுள்ளனர்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி என்பதால் இருநாடுகளும் சுதந்திரத்திற்கு முன்பு ஒன்றாக இருந்தது என்ற அடிப்படையில் இணைந்துள்ளதாக சிலர் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இந்திய அணிக்கு ஆதரவாக பாகிஸ்தான் ரசிகர்கள் பதிவிட்டு வரும் ட்விட்டர் பதிவுகள் மிகவும் ஆச்சர்யமாக உள்ளன. 

டாஸ் போட்ட பின் பேசிய விராட் கோலியும், ‘உண்மையாக சொல்கிறேன். வெளியில் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியாது. ஆனால், பாகிஸ்தான் ரசிகர்கள் இன்று எங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன். இது மிகவும் அரிதான ஒன்று’ என்று கூறினார். அப்போது, மைதானத்தில் பலத்த கரவொலி எழுந்தது. 

இந்தியா பாகிஸ்தான் ரசிகர்கள் சில நேரம் பகையாளிகள் போன்று காணப்படுகிறார்கள், சில நேரம் மிக நெருக்கமான நண்பர்களாகவும் இருக்கிறார்கள் என ஒருவர் வேடிக்கையாக ட்விட்டரில் கூறியிருந்தார். 

இதுவொருபுறம் இருக்க வெற்றி, தோல்வியின் அடிப்படையில் சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதாவது, இந்திய அணி இன்று வெற்றி பெற்றால் அது நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுக்கு சாதகமாக அமையும். குறிப்பாக பாகிஸ்தானுக்கு இந்திய அணி வெற்றி பெறவேண்டியது மிகவும் முக்கியமாகும்.

இங்கிலாந்து அணி தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுக்கு நான்காவது இடத்திற்கான வாய்ப்பு பிரகாசமாக மாறும். அதன் அடிப்படையிலே இந்திய அணி வெற்றி பெற வேண்டுமென பாகிஸ்தான் ரசிகர்கள் நினைப்பதாக சிலர் கூறுகின்றனர்.

என்ன இருந்தாலும், இந்திய அணிக்கு ஆதரவாக பாகிஸ்தான் ரசிகர்கள் களமிறங்கியுள்ளதை பலரும் வரவேற்கின்றனர். மனதார பாராட்டவும் செய்கின்றனர்.