விளையாட்டு

“தோனி இருந்தால் எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது” - சாஹா

“தோனி இருந்தால் எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது” - சாஹா

webteam

தோனி மட்டும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடியிருந்தால் தனக்கு அணியில் வாய்ப்பு கிடைத்திருக்காது என ரித்திமன் சாஹா தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக தோனியுடனான அனுபவங்கள் குறித்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் பேசி வருகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் வேறு எதையாவது பேசினாலும் கூட, அவர்களிடம் தோனி குறித்து ஒரு கேள்வியையாவது தொகுப்பாளர் மற்றும் செய்தியாளர்கள் முன் வைத்துவிடுகின்றனர். இதனால் பேட்டியளிப்பவர்களும் தோனி குறித்த கருத்தைப் பேசிவிடுகின்றனர்.

அந்த வகையில் ஸ்போர்ட்ஸ் டாக் நிகழ்ச்சியில் பேசிய சாஹா, “நான் தோனியின் இடத்தை நிரப்பவில்லை. எனக்கு டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது அவ்வளவு தான். நான் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான தினத்தன்று விவிஎஸ் லக்ஷ்மன் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ரோகித் ஷர்மாவை அணியில் சேர்த்தனர். அப்போது பயிற்சியில் நானும் ரோகித் ஷர்மாவும் எதிர்பாராத விதமாக ஒருவர் மீது மற்றொருவர் மோதிக் கொண்டோம். அதில் இருவரும் காயமடைந்தோம். ரோகித் விளையாட முடியாத அளவிற்குக் காயமடைந்தார்.

பின்னர் போட்டி தொடங்கும் நேரம் வந்ததால் தென்னாப்பிரிக்க கேப்டனுடன் தோனி டாஸ் போட்டுவிட்டு வந்தார். வரும்போது என்னைப் பார்த்து ‘நீ இன்று விளையாடுகிறாய் சாஹா’ என்றார். என்னால் நம்ப முடியவில்லை. ஏனென்றால் பயிற்சியாளர் நான் அணியில் இடம்பெற வாய்ப்பில்லை எனத் தெரிவித்திருந்தார். அப்போது தோனி தான் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். பின்னர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு பெற்றுவிட, அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒரு கீப்பராக, பேட்ஸ்மேனாக, வேகமாக ஸ்டெம்பிங்க் செய்வது என தோனியிடம் கற்றுக்கொள்ள ஏராளமானவை இருக்கின்றன” என்றார்.