’டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறேன். இதை இருமடங்காக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்று சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 300 விக்கெட்களை வீழ்த்தி ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை படைத்துள்ளார். நாக்பூரில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் இந்த மைல்கல் சாதனையை அவர் எட்டினார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் தனது 54-ஆவது டெஸ்ட் போட்டியில் 300-ஆவது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டெனிஸ் லில்லி 56 போட்டிகளில் 300 விக்கெட்களைக் கைப்பற்றியதே சாதனையாக இருந்தது.
அஸ்வின் கூறும்போது, 'நாக்பூர் டெஸ்டில் நாங்கள் சிறப்பாக பந்துவீசினோம். நானும் ஜடேஜாவும் சரியான இடத்தில் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினோம். இந்த விக்கெட்டுகள் எளிதாக கிடைத்துவிடவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறேன். இதை இருமடங்காக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இதுவரை 54 போட்டிகளில்தான் விளையாடி இருக்கிறேன். இன்னும் காலம் இருக்கிறது. சுழற்பந்து வீச்சு எளிதானது அல்ல. தற்போது கம்பீரமாக எழுந்து நிற்பது போல் தெரியும். ஆனால் இதற்கு பின் கடும் உழைப்பு இருக்கிறது’ என்றார்.