விளையாட்டு

“இந்திய அணியில் விளையாடுவதற்கு 5 மணி நேரம் முன்பு வரை..” - மனம் திறந்த சைனி

“இந்திய அணியில் விளையாடுவதற்கு 5 மணி நேரம் முன்பு வரை..” - மனம் திறந்த சைனி

webteam

இந்திய அணிக்காக சிவப்பு நிற பந்தில் விளையாடுவதற்கு 5 மணி நேரத்திற்கு முன்பு வரை, தான் டென்னிஸ் பந்தில் விளையாடியதாக இளம் வீரர் நவ்தீப் சைனி தெரிவித்துள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றியது. இந்திய அணியில் இளம் பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அவரது யார்க்கர் பந்துகள் இலங்கை வீரர்களை கலங்கடித்தது. இந்த போட்டி மட்டுமின்றி முந்தையப் போட்டியிலும் 2 விக்கெட்டுகளை சாய்த்து சைனி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அத்துடன் தொடரின் நாயகனாகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், தனது அனுபவம் குறித்து பேசிய சைனி, “டெஸ்ட் போட்டிகளில் சிவப்பு நிற பந்துகளில் விளையாடிவிட்டு, வெள்ளை நிற பந்தை வீசுவதற்கு ஆரம்பத்தில் கடினமாக இருந்தது. ஆனால் தொடர் பயிற்சிக்குப் பின்னர், எளிமையாக வெள்ளைப்பந்தை வீசுவது எப்படி என கண்டுபிடித்தேன். அதன்படி சிறப்பாக வீசினேன்.

எனது சீனியர்கள், நிலைமைக்கு ஏற்றவாறு பந்துவீச எனக்கு சொல்லிக் கொடுத்தனர். எனக்கு இயற்கையாகவே வேகமாக பந்துவீச வரும். எனது உடற்பயிற்சிக்கூடம், உணவுக்கட்டுப்பாடு அனைத்தையும் விட, இந்தியாவிற்காக விளையாடுவதை பெரிதாக கருதுகிறேன். நான் இந்திய அணிக்காக சிவப்பு நிற பந்தில் விளையாடுவதற்கு 5 மணி நேரத்திற்கு முன்பு வரை டென்னிஸ் பந்தில் தான் விளையாடினேன்” என தெரிவித்தார்.