விளையாட்டு

'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'

'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'

டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகளில் மறக்க முடியாத பெயர் செரினா வில்லியம்ஸ். அமெரிக்காவைச் சேர்ந்த செரினா வில்லியம்ஸ் பல கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற சாதனைக்கு சொந்தக்காரர். செரினா வில்லியம்ஸ் கடந்தாண்டு அலெக்சிஸ் ஒஹானியம் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்தத் தம்பதியினருக்கு கடந்தாண்டு பெண் குழந்தை பிறந்தது.

செரினாவுக்கு ஒலி்ம்பியா என்ற பெண் குழந்தை பிறந்தது. மகப்பேறுக்கு பின்பு பல மாதங்கள் ஓய்வில் இருந்த செரினா வில்லியம்ஸ் சில மாதங்களுக்கு முன்பு நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடி வெற்றிபெற்றார். அப்போது, குழந்தை ஒலிம்பியாவை கணவர் அலெக்சிஸ் ஒஹானியன் கைகளில் ஏந்தி போட்டியை பார்வையிட்டார். 

இதனையடுத்து செரினாவுக்கு டென்னிஸ் மீதான ஆர்வத்தை ஊக்கப்படுத்த தான் குழந்தையை தான் பார்த்துக்கொள்வதாகவும், விளையாட்டில் கவனம் செலுத்துமாறும் கணவர் கூறியுள்ளார். இதனால் உற்சாகமடைந்த செரினா, கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு பெருமைமிகு விம்பிள்டன் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். விம்பிள்டனில் இறுதிப் போட்டிக்கு வந்த செரினா, ஜெர்மனியைச் சேர்ந்த ஆஞ்செலிக் கெர்பரிடம் தோல்வியுற்றார்.

ஆனாலும் பல மாதம் ஓய்வில் இருந்து டென்னிஸ் விளையாட வந்த செரினாவை இப்போது உலகமே திரும்பிப் பார்க்கிறது. இந்நிலையில், நடந்துமுடிந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளைத் தொடர்ந்து உலக டென்னிஸ் அசோஷியேஷன் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அதன்படி 181-ஆவது இடத்தில் இருந்த செரினா வில்லியம்ஸ், 153 இடங்கள் முன்னேறி 28-ஆம் இடத்தைப் பிடித்தார்.

செரினாவின் போராட்டம் குழந்தை பிறந்ததோடு நிற்கவில்லை, அண்மையில் ஒரு நேர்காணலில் அவர் கூறியிருந்தது " ”என் குழந்தையின் இதயத்துடிப்பு குறைந்ததால் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அறுவை சிகிச்சை நன்றாக முடிந்தது. அதனை நான் உணர்வதற்குள் என் மகள் என்னுடைய கைகளில் இருந்தாள். அதுவொரு அற்புதமான உணர்வு. ஆனால், அதனை 24 மணிநேரம் கூட என்னால் அனுபவிக்க முடியவில்லை.

தொடர்ந்து எனக்கு கடுமையாக இருமல் ஏற்பட்டதால் நுரையீரலில் ரத்த உறைவு ஏற்பட்டது. அதனால், உடனடியாக அந்த ரத்த திட்டுகள் நுரையீரலுக்குள் செல்லாமல் இருக்க சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்களுக்கு அத்தகைய அவசர சூழலில் என்ன செய்வதென தெரியாமல் இருந்திருந்தால் நான் இன்றைக்கு உயிரோடு இருந்திருக்க மாட்டேன். குழந்தை பிறந்ததற்கு பின்பு நான் செத்து பிழைத்தேன்” என உணர்ச்சிப் பொங்க கூறியிருந்தார்.

செரினா வில்லியம்ஸின் ஆட்டத்தை பார்த்த அவரது கணவர் அலெக்ஸிஸ் ஒஹாணியன் இறுதிப் போட்டிக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் செரினா குறித்து பதிவிட்டிருந்தார், அது பலரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது "எங்கள் குழந்தை பிறந்த அடுத்த நாள், என் மனைவியை முத்தமிட்டு "போய்வா" என அறுவைச் சிகிச்சைக்கு அனுப்பினேன். அப்போது எங்கள் இருவருக்குமே தெரியாது அவள் உயிரோடு திரும்பி வருவாரா என்று, அவள் உயிரோடு இருக்க வேண்டும் என்று மட்டும் நினைதேதன், இப்போது அவள் விம்பிள்டன் இறுதியில்" என பதிவிட்டிருந்தார். இந்தத் ட்விட் பலரை கணகலங்கச் செய்ததாக ஆங்கில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.