விளையாட்டு

’வேண்டுமென்றே அவர் தலையில் வீசினேன்'-சச்சின் குறித்து அக்தர்

’வேண்டுமென்றே அவர் தலையில் வீசினேன்'-சச்சின் குறித்து அக்தர்

PT

1992 உலககோப்பையை பற்றிய நினைவுகளை பகிர்ந்திருக்கும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் சச்சினை குறித்தும் பல சுவாரசியமான விசயங்களை பகிர்ந்துள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே எப்போதும் இரண்டு நாட்டின் ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் ஆர்வம் பற்றிக்கொள்ளும். இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் இரு அணிகளும் மோதிகொள்ளும் போட்டி ஆசிய கோப்பையில் வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. அதற்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் இப்போதிலிருந்தே ரசிகர்களும் மீடியாக்களும் இந்தியா பாகிஸ்தான் போட்டியை பேசு பொருளாக்கியுள்ளனர்.

இதற்கு முன்பு கடந்த டி20 உலககோப்பையில் விராட் கோலி தலைமையில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து உலககோப்பையை விட்டே வெளியேறியது. அதற்கு பின்னர் இந்திய அணியில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதில் பல கேப்டன்களும் பல பந்துவீச்சாளர்களும் மாற்றப்பட்டு விளையாடி வருகின்றனர். இதனால் எதிர் வரும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஆசியகோப்பை போட்டி இப்போதே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் 1999 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் நடந்த சுவாரசியமான நினைவுகளை பகிர்ந்துள்ளார் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர். 1999 ஆம் ஆண்டு உலகக் கோப்பை பற்றி பேசியிருக்கும் அவர், ”பல பேட்ஸ்மேன்கள் என்னுடைய பந்துவீச்சுக்கு பயந்து ஆடினார்கள். சிலர் அவர்களது கால்களை கூட நகர்த்த மாட்டார்கள். ஆனால் சச்சின் என்னுடைய பந்துவீச்சை எந்தவித பயமும் இல்லாமல் விளையாடினார். மேலும் சச்சின் தனக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், இதன் காரணமாக 2006 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் சென்று விளையாடிய போது கராச்சியில் நடந்த டெஸ்ட் போட்டியில், ”சச்சினை வேண்டுமென்றே தாக்க விரும்பினேன். அதன் காரணமாக அதிவேகமான பவுன்சரை வீசி நான் அவரை ஹெல்மெட்டில் அடித்தேன், அப்போது அவர் இறந்துவிடுவார் என்று நினைத்தேன்" என்று கூறியிருக்கிறார் ஷோயப் அக்தர்.