விளையாட்டு

சிஎஸ்கே கேப்டனாக இருக்கும்வரை தோனிக்கு தூக்கமில்லா இரவுகள்தான் - கம்பீர்

சிஎஸ்கே கேப்டனாக இருக்கும்வரை தோனிக்கு தூக்கமில்லா இரவுகள்தான் - கம்பீர்

webteam

சென்னை அணி குறித்தும், தோனி குறித்தும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் கூறியுள்ளார்.

இந்திய இளைஞர்களுக்கு கிரிக்கெட் என்றால் உயிர் மூச்சு. அதுவும் இப்போது வளரும் கிரிக்கெட் வீரர்களுக்கு தோனிதான் ஆதர்ச நாயகன். இந்தாண்டு ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி தன் ஓய்வை அறிவித்தபோது, உலகெங்கிலும் உள்ள இளைஞர்களின் மனம் அதனை ஏற்க மறுத்தது. இந்திய ஜெர்சியில் தோனியை காண முடியாது என வருந்தினர். ஆனாலும் அவர்களுக்கு இருந்த ஒரே ஆறுதல் தோனியை சிஎஸ்கே ஜெர்சியில் பார்க்கலாம் என்பதுதான். ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை ஏமாற்றத்தை தந்தது. பிளே ஆஃப்க்கு செல்லாமல் வெளியேறியது சென்னை. அதுவும் முதல் அணியாக.

இது சென்னை ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் என்றாலும், என்றுமே நாங்கள் சிஎஸ்கேதான் என்று ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து அன்பை பொழிந்து தோனியையே மிரள வைத்தார்கள். ரசிகர்களின் அன்பால் தோனியும் சற்றே திக்குமுக்காடிதான் போனார். இதுகுறித்து பேசிய தோனியும், இப்படிப்பட்ட ரசிகர்கள் கிடைக்க நாங்கள் கொடுத்து வைக்க வெண்டும் என தெரிவித்தார்.

அதேபோல் சென்னை அணி நிர்வாகமும், "2021 ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணியை தோனி வழி நடத்துவார். இந்தாண்டு மோசமாக இருந்ததன் காரணமாக ஒட்டுமொத்தமாக அனைத்தையும் மாற்ற வேண்டும் என அவசியமில்லை" என தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை அணி குறித்தும், தோனி குறித்தும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் கூறியுள்ளார்.

''சிஎஸ்கே நிர்வாகம் தோனிக்கு முழு சுதந்திரத்தை வழங்குகிறது. அனைத்து விதமான மரியாதையையும் தோனி பெறுகிறார். அவர்களுக்கு இடையேயான உறவு அற்புதமானது. அடுத்த வருடமும் சிஎஸ்கே கேப்டனாக தோனி இருப்பார் என நிர்வாகம் கூறியதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. அவர் விளையாட நினைக்கும் வரை அவர் விளையாடுவார்.ஐபிஎல் போட்டிகளில்  மூன்று கோப்பைகளை வென்றுள்ளார் தோனி. மும்பைக்கு பிறகு நல்ல அணியை அவர் உருவாக்கியுள்ளார்.

எனவே அடுத்த வருடமும் தோனியின் தலைமையில் சிஎஸ்கே இருக்குமென நிர்வாகம் கூறியுள்ளது. அதனால்தான் தோனியும் விசுவாசமாக இருக்கிறார். அதனால் தோனி அவருடைய இதயம், ஆன்மா, வியர்வை, தூக்கமில்லா இரவுகளை கொடுக்கிறார். எனக்கு கண்டிப்பாக தெரியும், தோனி, சிஎஸ்கே கேப்டனாக இருக்கும்வரை அவருக்கு தூக்கமில்லா இரவுகள் தான்'' என தெரிவித்துள்ளார்