ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருப்பது என்னுடைய அதிர்ஷ்டம் என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற இருக்கும் ஒருநாள், டி20 போட்டிகளுக்கு இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவானும், பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் அணியின் துணை கேப்டனாக புவனேஷ்வர் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் ஜூலை 13 ஆம் தேதி தொடங்குகிறது. இலங்கைக்கு எதிராக இந்தியா 3 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய புவனேஷ்வர் குமார் "இந்திய அணிக்கு துணைக் கேப்டனாக இருப்பது மகிழ்ச்சிதான். ஒரு மூத்த வீரராக அணியில் இருக்கும் மற்ற வீரர்களின் திறனை மெருகேற்றுவது, அவர்களின் மன நிலையை மேம்படுத்துவது என்பதே என்னுடைய முக்கிய பணியாக இருக்கும். இந்தத் தொடரில் ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்படுவோம். அதற்கான என்னுடைய முழு பங்களிப்பை வழங்குவேன்" என்றார்.
மேலும் பேசிய அவர் "ராகுல் டிராவிட்க்கு எதிராக ஐபிஎல்-லில் நான் விளையாடி இருக்கிறேன். அப்போதுதான் நான் ஐபிஎல் அணியில் அறிமுகமான தருணம். அப்போது அவருடன் பெரிதாக பழகும் வாயப்பு கிடைக்கவில்லை. ஆனால் நான் பயிற்சிக்காக தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு சென்றபோது அவருடன் நிறைய பேச வாய்ப்பு கிடைத்தது. நான் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்பினேன். ஆனால் இப்போது அவர் பயிற்சியாளராக வந்திருப்பது என்னுடைய அதிர்ஷ்டம்" என்றார் புவனேஷ்வர் குமார்.