விளையாட்டு

"கோலியின் திட்டத்தை பும்ரா செயல்படுத்திவிட்டார்" - லார்ட்ஸ் டெஸ்டும் மஞ்சரேக்கர் கருத்தும்

"கோலியின் திட்டத்தை பும்ரா செயல்படுத்திவிட்டார்" - லார்ட்ஸ் டெஸ்டும் மஞ்சரேக்கர் கருத்தும்

jagadeesh

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு பவுன்சர் வீசுவது கோலியின் திட்டமாக இருக்கக் கூடும் அதனை கச்சிதமாக செயல்படுத்தியவர் பும்ரா என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு பவுன்சர் உள்ளிட்ட கடினமான பந்துகளை 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினார் பும்ரா. அப்போது தொடங்கிய மோதல் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா பேட்டிங் செய்யும் வரை தொடர்ந்தது. ஆனால் இதனை சாதகமாக பயன்படுத்திய இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தியது.

இது குறித்து சஞ்சய் மஞ்சரேக்கர் "இது முழுக்க முழுக்க விராட் கோலியின் திட்டமாகவே இருக்க கூடும் என நினைக்கிறேன். இங்கிலாந்து அணியில் அனுபவமிக்க மூத்த வீரர் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். அவருக்கு பவுன்சர்கள் வீசுவதும், அவருக்கு காயம் ஏற்படுத்துவதும் இங்கிலாந்து அணிக்கு பின்னடைவை ஏற்படுத்த கூடும். அந்தத் திட்டத்தை பும்ரா கச்சிதமாக செயல்படுத்தினார். அதற்கு நல்ல பலனும் கிடைத்தது" என்றார்.

மேலும் பேசிய சஞ்சய் "காரணம் எதுவாக இருந்தாலும் இந்திய அணியின் இந்த திட்டம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஏனென்றால் நான் விளையாடிய காலக்கட்டங்களில் இதுபோன்ற திட்டங்களை தீட்டியதில்லை. நாம் தான் எதிரணியின் வேகப்பந்துவீச்சுக்கு பயப்படுவோம். ஆனால் கோலியின் அனுகுமுறை ஆக்ரோஷமானது. அவர் எதிரணியை கண்டு ஒருபோதும் அஞ்சியதில்லை. அது அவரது முகத்தில் இருந்தே தெரிந்துக்கொள்ளலாம்" என்றார் அவர்.