விளையாட்டு

இரக்கமில்லாமல் அடித்த ஜானி, வார்னர் - ஹைதராபாத் 231 ரன்கள் குவிப்பு

இரக்கமில்லாமல் அடித்த ஜானி, வார்னர் - ஹைதராபாத் 231 ரன்கள் குவிப்பு

webteam

பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அதிரடியாக விளையாடிய ஹைதராபாத் அணி 231 ரன்கள் குவித்தது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இடையேயான ஐபிஎல் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஆரம்பம் முதலே அதிராடியாக விளையாடினர். பெங்களூர் வீரர்களின் பந்துவீச்சை நான்கு புறமும் ஜானி சிதறடித்தார். அவரது அதிரடியால் பெங்களூர் அணி நிலை குலைந்தபோது, 56 பந்துகளில் 114 ரன்கள் எடுத்த நிலையில் ஜானி அவுட் ஆகினார். 

இருப்பினும் மறுபுறம் விளையாடிய டேவிட் வார்னர் தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்தினார். இதற்கிடையே வந்த விஜய் ஷங்கர் முதலில் பந்தில் சிக்ஸருடன் தொடங்கினாலும், 9 (3) ரன்களிலே வெளியேறினார். தொடர்ந்து விளையாடிய வார்னர் 54 பந்துகளில் சதம் அடித்தார். போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றதால், அந்த நிமிடம் அரங்கமே அதிர்ந்தது. 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 231 ரன்கள் குவித்தது. இந்த ஐபிஎல் தொடரிலேயே இது தான் அதிகபட்ச ரன் குவிப்பு ஆகும். பெங்களூர் அணியில் சாஹல் மட்டும் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இதையடுத்து 232 என்ற கடினமான இலக்கை எதிர்த்து பெங்களூர் அணி விளையாடவுள்ளது.