விளையாட்டு

ஐபிஎல் ஃபைனல்: களை கட்டுகிறது ஐதராபாத், ஓட்டல்கள், பப்கள் தாராளம்!

webteam

12 வது ஐபிஎல் திருவிழாவின் கடைசி நாள் இன்று. கோப்பை யாருக்கு என்பதற்கான இறுதி யுத்தம் இன்றுதான் நடக்கிறது, ஐதராபாத்தில்! மூன்று முறையை கோப்பையை கைப்பற்றிய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ரோகித் தலைமையிலான மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோத இருக்கின்றன இன்றைய போட்டியில். வெல்லும் அணிக்கு காத்திருக்கிறது 28 கோடி ரூபாய்!

இது ஒருபுறம் இருக்க, ஐபிஎல் ஃபைனலுக்கான டிக்கெட்டுகள், விற்பனையை ஆரம்பித்த இரண்டே நிமிடங்களில் தீர்ந்துவிட்டன, ஆன்லைனில்! இதனால் கவலையில் இருக்கின்றனர் ரசிகர்கள். அவர்களின் கவலையை அப்படியே பணம் பண்ண ஆரம்பித்திருக்கின்றன ஐதராபாத் நகரில் உள்ள முக்கியமான ரெஸ்டாரண்ட்களும் பப்களும். ‘’கவலைய விடுங்க. பிரண்ட்ஸோட வாங்க. டிரிங்ஸ்லயிருந்து டின்னர்வரை டிஸ்கவுண்ட்ல தர்றோம்’’ என்று தாராளம் காட்டியிருக்கின்றன, ஓட்டல்கள்.ஐதராபாத்தின் முக்கியமான பகுதியான ஜூப்ளி ஹில்ஸில் உள்ள பிரபலமான பப் (pub) ஒன்றின் உரிமையாளரான அனிருத் பட் கூறும்போது, ‘கிரிக்கெட் போட்டியை காணும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சுகமான சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறோம். அவர்கள் ஜாலியான அனுபவத்தை உணரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. 8 மணி வரை தள்ளுபடி விலையில், 128 ரூபாய்க்கு கிடைக்குமாறு ஹேப்பி ஹவர்ஸ் மெனு தயாரிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் 8 மணிக்கு முன்பே, இங்கு வரவேண்டும் என்று இப்படி ஏற்பாடு செய்துள்ளோம்’’ என்கிறார்.

இதே பகுதியில் உள்ள மற்றொரு பப் ஒன்றின் மானேஜர் பிரதீப் குமார், ‘’நண்பர்களுடன் ஜாலியாக அமர்ந்து இறுதிப் போட்டியை பார்ப்பதற்கும் விவாதிப்பதற்கும் எங்கள் பப் சிறந்த இடமாக இருக்கும். இதற்கான தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டிருக்கிறது’’ என்கிறார் உற்சாகமாக!

இதே போல ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் பல ஓட்டல்கள் மற்றும் பப்களும் கச்சிபவுலி பகுதியில் உள்ள பல ஓட்டல்களும் தள்ளுபடி விலையை அறிவித்திருக்கின்றன. 

மாதாப்பூரைச் சேர்ந்த மோகித் அஸ்வானி என்ற கிரிக்கெட் ரசிகர் கூறும்போது, ‘’நான் தீவிர கிரிக்கெட் ரசிகன். இந்த ஐபிஎல் தொடரில் ஐதரா பாத்தில் நடந்த அனைத்து போட்டிகளையும் ஸ்டேடியத்துக்கு சென்றுதான் நண்பர்களுடன் பார்த்தேன். ஆனால், இறுதிப் போட்டிக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. இதனால் நண்பர்களோடு ஏதாவது ஒரு ரெஸ்டாரண்ட் சென்று பார்க்க இருக்கிறோம்’’ என்கிறார்.