விளையாட்டு

கங்குலியின் 'ஃபேவரிட்' முதல் தோனி 'என்ட்ரி' வரை...- இந்திய அணிக்கு எழுச்சி தந்த ஜான் ரைட்!

கங்குலியின் 'ஃபேவரிட்' முதல் தோனி 'என்ட்ரி' வரை...- இந்திய அணிக்கு எழுச்சி தந்த ஜான் ரைட்!

jagadeesh

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் உருவை மாற்றிய ஜான் ரைட் தன்னுடைய 67 ஆவது பிறந்தநாளை இன்று (ஜூலை 5) கொண்டாடுகிறார். கிரிக்கெட் பயிற்சியாளராக இந்திய அணிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

1999-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் சோதனையான காலக்கட்டம். உலகக் கோப்பை தோல்வி, சூதாட்டப் புகார்கள் என இந்திய அணியை சூறாவளிகள் சுழற்றி அடித்துக்கொண்டிருந்த தருணம். அந்தநேரத்தில் இந்திய அணியின் கேப்டனாக சச்சின் டெண்டுல்கரும், பயிற்சியாளராக கபில்தேவும்இருந்தார்கள். ஆனால், ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் படுதோல்வியடைந்தது, பின்பு தாயகத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் தோல்வியடைந்தது இந்திய அணி. இதனையடுத்து கேப்டன் பதவியில் இருந்து சச்சின் விலகினார். மேலும், கபில் தேவும் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினார். இதனையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் கேள்விக்குறியானது.

அப்போதுதான் சவுரவ் கங்குலி முழு நேர கேப்டனாக நியமிக்கப்பட்டார். பின்பு முதல் முறையாக நியூசிலாந்தின் முன்னாள் வீரர் ஜான் ரைட்டை பயிற்சியாளராக நியமித்தது பிசிசிஐ. அப்போது துணிவாக சவுரவும் ஜான் ரைட்டும் இந்திய அணியில் மேற்கொண்ட பலவித மாற்றங்கள் உலக கிரிக்கெட் அரங்கில் கவனம் பெற்றது.

எதிர்காலமே ஜீரோவாக இருந்த இந்திய கிரிக்கெட்டின் புதிய அத்தியாயங்கள் ஜான் ரைட் பயிற்சியாளராக இருந்த காலக்கட்டத்தில்தான் நிகழ்ந்தன. இந்திய கிரிக்கெட்டின் உருவையே அவர் மாற்றினார் என்றும் சொல்லலாம். 

நியூசிலாந்தின் கிரைஸ்ட் சர்ச் நகரில் இருக்கும் டார்பீல்டு என சிறிய ஊரில் ஜூலை 5, 1954 இல் பிறந்தார் ஜான் ரைட். 1978-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஜான் ரைட் டெஸ்ட் போட்டிகளில் 5000 ரன்களை குவித்த முதல் நியூசிலாந்து பேட்ஸ்மேன் ஆவார். 1980-ஆம் ஆண்டுகளில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர்கள் உலக கிரிக்கெட்டை அச்சுறுத்திக்கொண்டு இருந்த தருணத்தில் அசால்ட்டாக சதம் விளாசியவர் ஜான் ரைட். மேலும், கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் எதிராகவும் சதங்களை விளாசியிருக்கிறார் ஜான் ரைட். டெஸ்ட் போட்டிகளில் ஓடியே 4 ரன்களும் பின்பு "ஓவர் த்ரோ" மூலம் 4 ரன்கள் என ஒரே பந்தில் 8 ரன்கள் சேர்த்தவர் ஜான் ரைட்.

85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஜான் ரைட் 12 சதங்களை விளாசியுள்ளார். அவர் அதிகபட்சமாக இந்தியாவுக்கு எதிராக 185 ரன்களை சேர்த்தார். ஜான் ரைட் 1993-ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுப்பெற்றார். அதன் பின்பு இங்கிலாந்தின் கென்ட் கவுண்ட்டி கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளரானார். பின்பு 2000 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதன் பின்பு இந்தியாவின் மகத்தான எழுச்சி தொடங்கியது. 2001 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்திய அணி. அதில் இந்திய அணி கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்ஸில் "பாலோ ஆன்" பெற்று வெற்றிப் பெற்ற அறிய நிகழ்வும் நடந்தது.

2003 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய கிரிக்கெட் அணி. பின்பு 2004-ஆம் ஆண்டு தொடக்கத்தில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்று சாதனைப் படைத்தது இந்திய கிரிக்கெட் அணி.

இவையெல்லாம் புகழ்ப்பெற்ற வெற்றிகள், ஆனால் இடையிடையே இந்தியா பல்வேறு நாடுகளுடனான போட்டிகளில் பெரும் வெற்றிகளை ருசித்தது இந்திய அணி. இப்போதும் கூட சவுரவ் கங்குலி, "எனக்கு எப்போதும் மனதுக்கு நெருக்கமான பயிற்சியாளர் என்றால் அவர் ஜான் ரைட்தான்" என்பார். முன்னாள் கேப்டன் தோனியை இந்திய அணிக்குள் கொண்டு வந்ததும் ஜான் ரைட் - கங்குலி கூட்டணிதான்.

பின்பு 2005-இல் ஜான் ரைட் இந்திய கிரிக்கெட்டுடனான ஒப்பந்தம் முடிக்கப்பட்டது. அதன் பின்பு இந்திய அணியின் பயிற்சியாளரானார் கிரெக் சாப்பல் (இந்தக் காலம் சோதனைக் காலம்; அது ஒரு தனி கதை). பின்பு 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளரானார் ஜான் ரைட். அந்த ஐபிஎல் தொடரில் முதல்முறையாக சாம்பியனானது மும்பை இந்தியன்ஸ். ஜான் ரைட் காலகட்டத்தில்தான் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அடையாளம் காட்டப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.