விளையாட்டு

’இதை எப்படி பி டீம்னு சொல்வீங்க?’: இலங்கை வீரர் கேள்வி

’இதை எப்படி பி டீம்னு சொல்வீங்க?’: இலங்கை வீரர் கேள்வி

webteam

பாகிஸ்தானில் தொடரை வென்ற எங்கள் அணியை, பி டீம் என்று எப்படி அழைப்பீர்கள் என்று கேட்டுள்ளார் இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் தனுஷ்கா குணதிலகா.

இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடியது. இதில் பங்கேற்க இலங்கை அணியின் முன்னணி வீரர்கள், பாதுகாப்பை காரணம் காட்டி மறுத்துவிட்டனர். இதனால் இரண்டாம் நிலை வீரர்கள் அங்கு சென்று விளையாடினர். இந்த அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த தொடக்க ஆட்டக்காரர் தனுஷ்கா குணதிலகா கூறும்போது, ‘இந்த அணியை எப்படி பி டீம் என்று சொல்ல முடியும்?’ என்று கேள்வி கேட்டார்.

அவர் கூறும்போது, ’இலங்கை அணி நிர்வாகம் எங்களுக்கு முழு சுதந்திரம் தந்தது. எந்த அழுத்தமும் தரவில்லை. இந்த தொடரின் மூலம் சில வீரர்களுக்கு, சிறந்த வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். அதன் காரணமாக இந்த அணி வலுவானதாக மாறியிருக்கிறது. ஒவ்வொரு வீரரும் தங்கள் இடத்துக்காகத்தான் போராடி வருகிறார்கள். இந்த தொடரில், பனுகா, ராஜபக்சே ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். மூத்த வீரர்கள் வரும் போது இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.

பாகிஸ்தான் ரசிகர்கள், எங்கள் அணியை இரண்டாவது டீம் என்றோ, பி டீம் என்றோ அழைக்கிறார்கள். இது எங்களின் அணியின் இரண்டாவது டீம் அல்ல. சில வீரர்கள் பங்கேற்கவில்லை, அவ்வளவுதான். குசால் பெரேரா, காயம் காரணமாக வரவில்லை. மேத்யூஸ், கடந்த டி-20 தொடரிலேயே இல்லை. கடந்த தொடரில் விளையாடிய டிக்வெல்லாவும் மலிங்காவும் மட்டும்தான் இந்த தொடரில் பங்கேற்கவில்லை. பிறகெப்படி அப்படி சொல்வீர்கள்?. நாங்கள் டி-20 யில் முதல் இடத்தில் இருக் கும் அணியை வென்றிருக்கிறோம்’’ என்றார்.