சென்னையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஹாக்கி தொடர் மீண்டும் நடைபெற்று வருகிறது. சுதந்திரத்துக்கு முன்பே ஹாக்கி விளையாட்டில் ஆதிக்கம் செலுத்திய தமிழகம், அதன் பிறகு அந்த பெருமையை எப்படி இழந்தது, ஏன், எதனால் இழந்தது என்பதை இங்கு பார்க்கலாம்.
எந்தவொரு விளையாட்டாக இருந்தாலும், பெரும்பான்மையான மக்களால் விளையாடப்பட்டால்தான் வளரும். அப்படித்தான் 1900 ஆம் ஆண்டுகளில் ரயில்வே எங்கெல்லாம் இருந்ததோ, அங்கெல்லாம் ஹாக்கியும் இருந்தது. அந்த காலகட்டத்தில் ரயில்வே அணிகளே இந்தியாவின் பலம் வாய்ந்த அணியாக இருந்ததே அதற்குக் காரணம்.
அப்போது மெட்ராஸ் மாகாணமாக இருந்த சென்னையில், ரயில்வே மட்டும் இல்லாமல் ICF உடனிருந்ததால் மெட்ராஸ் மாகாண வீரர்கள் சிறப்பாக ஹாக்கி விளையாடினர். அதன் காரணமாக, 1936 ஆம் ஆண்டு தமிழகத்தில் இருந்து குட்சீர் குல்லேன் என்ற வீரர் ஒலிம்பிக்கில் பங்கேற்றார். அதன் பிறகு மெட்ராஸ் UNITED கிளப் மற்றும் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் இணைந்து நடத்திய தொடர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 1953 முதல் 1980 வரை இந்திய அணியில் தமிழக வீரர்கள் இடம்பெற்றனர்.
ஹாக்கி விளையாட்டு செயற்கை இழை தளத்திற்கு மாறிய நாளில் இருந்து தமிழகத்தில் ஹாக்கி மீதான ஆர்வமும் குறைய துவங்கியது. வறுமையில் இருந்த வீரர்கள் அதிகம் விளையாடி வந்த ஹாக்கி விளையாட்டை, செயற்கை இழை தளம் வருகைக்கு பின் கைவிடும் சூழல் ஏற்பட்டது. மறுபுறம் 1983 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இந்தியா உலகக்கோப்பையை வென்ற பிறகு, கிரிக்கெட் மீதான மோகம் அதிகரித்தது. இதன் காரணமாக ஹாக்கி விளையாடும் வீரர்கள் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் சரிந்தது.
தமிழகத்தில் நடத்தப்பட்டு வந்த சென்னை ஹாக்கி லீக், மதுரை ஹாக்கி லீக் மற்றும் திருச்சியில் ஹாக்கி லீக் ஆகியவை தற்போது களையிழந்துள்ளன. ஒரு காலத்தில் சென்னையில் மட்டும் 120க்கும் அதிகமான ஹாக்கி கிளப் அணிகள் இருந்தன.
தற்போது அந்த எண்ணிக்கையும் பெரும் சரிவை சந்தித்துள்ளது. தமிழகத்தில் ஹாக்கி விளையாட்டை வளர்க்க வேண்டுமெனில், சிறந்த வீரர்களையும் பயிற்சியாளர்களையும் கண்டறிந்து இளம் வயதில் இருந்தே ஊக்குவிக்க வேண்டும் என்ற கருத்து அழுத்தமாக பதிய வைக்கப்படுகிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழகத்தில் இருந்து 30 வீரர்கள் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்றுள்ளனர். அவர்களில் 12 பேர் ஹாக்கி வீரர்கள். தற்போது சென்னையில் சர்வதேச ஹாக்கி தொடர்களை மீண்டும் நடத்த தொடங்கி இருந்தாலும் ஹாக்கி விளையாட்டில் தமிழகம் மீண்டும் ஜொலிக்க வேண்டுமெனில், தமிழ்நாடு ஹாக்கி சங்கம் மீண்டும் உயிர்பெற்று டிவிஷன் போட்டிகளை நடத்த வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.