உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இன்று இந்தியா ஸ்பெயின் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது.
கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு (2023) 2-வது முறையாக இந்தியா உலகக் கோப்பை ஹாக்கி தொடரை நடத்துகிறது. ஜனவரி 13 ஆம் தேதி (இன்று) தொடங்கி வருகிற 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்க உள்ள நிலையில், அவை ஒவ்வொரு அணிக்கும் 4 அணிகள் வீதம் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், டி பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. முதலில் நடைபெறும் லீக் சுற்றுப் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் உள்ள மற்ற அணியுடன் ஒருமுறை மோதும். இதில், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக காலிறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.
உலகக் கோப்பை வரலாற்றில், கடந்த 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி 3-வது இடத்தை பிடித்தது. அதேபோல் 1973 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் இந்திய அணி 2-வது இடத்தை பிடித்தது. இதையடுத்து 1975 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை ஹாக்கி தொடரில், அஜித்பால் சிங் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. ஆனால், அதன்பிறகு இந்திய அணியின் சாம்பியன் பட்டம் கனவானது.
இந்திய ஹாக்கி அணி உலகக் கோப்பையை வென்று 48 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இந்த முறை உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், 15-வது உலககோப்பை தொடரின் முதல் நாளான இன்று, இந்திய அணி தனது டி பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்பெயின் அணியுடன் மோதியது. ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற இப்போட்டியில் தவரிசையில் 6-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 8-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் உடன் மோதியது.
மிகவும் பரபரப்பாக தொடங்கிய இந்த போட்டியில், 12-வது நிமிடத்தில் ரோகிதாஸ் அமித் இந்திய அணிக்காக முதல் கோலை அடித்து இந்திய முன்னிலை பெற வைத்தார். இதையடுத்து கோலை திருப்ப முயன்ற ஸ்பெயின் அணியின் முயற்சிகள் அனைத்து தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 26-வது நிமிடத்தில் இந்தியாவின் ஹார்டிங் சிங் இந்திய அணிக்காக 2-வது கோலை அடித்தார். இதன் பிறகு இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் ஆட்டத்தின் இறுதியில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்நிலையில், 2-வது முறையாக இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இதையடுத்து இந்திய அணி அடுத்தடுத்த போட்டிகள் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழையுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.