விளையாட்டு

கடைசி நிமிடம் வரை பரபரப்பு.. 3வது முறையாக ஹாக்கி உலகக்கோப்பையை தட்டி தூக்கியது ஜெர்மனி!

கடைசி நிமிடம் வரை பரபரப்பு.. 3வது முறையாக ஹாக்கி உலகக்கோப்பையை தட்டி தூக்கியது ஜெர்மனி!

webteam

ஒடிசாவில் நடைபெற்ற ஹாக்கி உலகக்கோப்பை திருவிழாவில் ஜெர்மனி 3வது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

ஒடிசாவில் ஹாக்கி உலகக்கோப்பை

ஒடிசாவில் உள்ள புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் 15வது ஹாக்கி உலகக் கோப்பை தொடர் கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கி, கோலாகலமாக நடைபெற்றது. இந்தத் தொடரில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்பட்டன. டி பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி, நாக் அவுட் பிரிவில் ஷூட் அவுட் முறையில் நியூசிலாந்திடம் 5-4 என்ற கணக்கில் தோல்வியுற்று காலிறுதி வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டது.

இறுதியாட்டத்தில் ஜெர்மனி - பெல்ஜியம்

அதேநேரத்தில், அனைத்து லீக், காலியிறுதி மற்றும் அரையிறுதி முடிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம் அணியும், முன்னாள் சாம்பியனான ஜெர்மனியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன. இதையடுத்து, இன்று (ஜனவரி 29) புவனேஷ்வரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெல்ஜியம் அணி, ஜெர்மனியை எதிர்கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக சென்ற இந்தப் போட்டியில் ஆரம்பத்திலேயே 2 கோல்களை பெல்ஜியம் அணி அடித்து அசத்தியது.

சமநிலையான ஆட்டம்

இடைவேளையின்போது 0-2 என பின்தங்கியிருந்த ஜெர்மனி, இரண்டாவது பாதியில் மூன்று கோல்களை அடித்து 3-2 என முன்னிலை பெற்றது. பின்னர், ஆட்டநேர முடிவில், பெல்ஜியம் 1 கோல் அடித்து ஆட்டத்தை 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலைக்குக் கொண்டுவந்தது. அதாவது, பெல்ஜியம் அணி வீரர் ஃப்ளோரன்ட் வான் ஆபெல் புளோரன்ட் 10வது நிமிடத்திலும், டாங்குய் கோசின்ஸ் 11வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். அதன்பிறகு ஜெர்மனி வீரர் நிக்லாஸ் வெல்லன் 29வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அதைத் தொடர்ந்து ஜெர்மனி வீரர் கோன்சலோ பெய்லாட் 41வது நிமிடத்திலும், அவ்வணி கேப்டன் மேட்ஸ் கிராம்பூஷ் 48வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினர். ஆட்ட இறுதியில் பெல்ஜியம் வீரர் டாம் பூன் 59வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து 3-3 என்ற கணக்கில் சமப்படுத்தினார்.

3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்

இதையடுத்து, பெனால்டி ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதில் ஜெர்மனி அணி 5 கோல்கள் அடிக்க, பெல்ஜியம் அணி 4 கோல்களை மட்டுமே அடித்தது. இதனால், நூலிழையில் பெல்ஜியம் அணி, ஹாக்கி உலகக்கோப்பையைத் தவறவிட்டது. இதையடுத்து ஜெர்மனி, 3வது முறையாக உலகக்கோப்பையை உச்சி முகர்ந்தது. ஏற்கெனவே ஜெர்மனி அணி, 2002 மற்றும் 2006 உலகக்கோப்பையை வென்றிருந்தது.

பட்டியலில் பாகிஸ்தான் முதலிடம்

உலகக்கோப்பையை அதிக முறை வென்ற பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. அது, 4 முறை உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியும், ஜெர்மனியும் (தலா 3 முறை) உள்ளன. இந்தப் பட்டியலில் இந்தியா ஒரே ஒரு முறை வென்றுள்ளது. 1975ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது.