விளையாட்டு

களத்தில் மோதிக்கொண்ட ரபாடா- குயின்டன் டி காக்: அமைதிப்படுத்திய டுபிளிசிஸ்!

களத்தில் மோதிக்கொண்ட ரபாடா- குயின்டன் டி காக்: அமைதிப்படுத்திய டுபிளிசிஸ்!

webteam

இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க வீரர்கள் ரபாடாவும் குயின்டன் டி காக்கும் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். அவர்களை கேப்டன் டுபிளிசிஸ் அமைதிப்படுத்தினார்.

இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி, புனேவில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. மயங்க் அகர்வால் 108 ரன்களும் கேப்டன் விராத் கோலி 254 ரன்களும் ஜடேஜா 91 ரன்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்துள்ளது. மூன்றாவது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

இந்நிலையில் இந்திய அணி நேற்று பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, தென்னாப்பிரிக்க வீரர்கள் ரபாடாவும் விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக்கும் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 

முதல் இன்னிங்ஸின் 123 வது ஓவரை, தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடா வீசினார். பந்தை எதிர்கொண்ட ஜடேஜா, எதிர்முனைக்கு அடித்தார். பந்தை எடுத்த ரபாடா, அதை விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக்-கை நோக்கி வீசினார். அவர் அதை சரியாகக் கவனிக்கவில்லை. பந்து மேலே சென்றதால், விராத் கோலியும் ஜடேஜாவும் விரைவாக ஓடி ஒரு ரன் எடுத்தனர்.

இதனால் கோபமான ரபாடா, ‘பந்தை கவனி...’ என்று ஆபாசமாகத் திட்டினார், டி காக்கை. பதிலுக்கு அவரும் கத்தினார். இருவ ரும் முறைத்துக்கொண்டே இருந்தனர். அந்த ஓவர் முடிந்த பின்னும் இருவருக்குமான வார்த்தை போர் முற்றியது. பின்னர் கேப்டன் டுபிளிசிஸ் இருவரையும் சமாதானப்படுத்தியதை அடுத்து பிரச்னை முடிவுக்கு வந்தது.