விளையாட்டு

“இறைச்சி கேட்டு அழுது இருக்கிறான்” - காமன்வெல்த் தங்கம் வென்ற அச்சிந்தாவின் தாய் கண்ணீர்!

“இறைச்சி கேட்டு அழுது இருக்கிறான்” - காமன்வெல்த் தங்கம் வென்ற அச்சிந்தாவின் தாய் கண்ணீர்!

ச. முத்துகிருஷ்ணன்

“என் மகன் இறைச்சி கேட்டு அழுது இருக்கிறான். ஆனால் அதை வாங்க முடியாத நிலையில் இருந்தோம்” என்று தன் மகனை வளர்த்த அனுபவங்களைப் பகிர்ந்தார் காமன்வெல்த் தங்கம் வென்ற அச்சிந்தாவின் தாய்.

நடைபெற்று வரும் 2022 பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஞாயிற்றுக்கிழமை அச்சிந்தா ஷூலி, ஆண்களுக்கான 73 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார். 20 வயதேயான அவர் மொத்தம் 313 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கத்தை தனதாக்கினார்.

இது தொடர்பாக பேசிய அச்சிந்தாவின் தாயார் பூர்ணிமா ஷூலி, “அச்சிந்தா குழந்தையாக இருக்கும்போதே அவரது தந்தை இறந்துவிட்டார். அப்போது முதல் வாழ்வதே எங்களுக்கு போராட்டமாக மாறியது. அவனது உணவுத்தட்டில் எப்போதும் முழுமை இருக்காது. சோறு இருந்தால், காய்கறிகள் இருக்காது. அவ்வளவு ஏழ்மையில் எங்கள் குடும்பம் இருந்தது.

பளு தூக்குபவர்களின் உணவில் கட்டாயம் இறைச்சி இருக்க வேண்டும். ஆனால், அதை அவனுக்கு எங்களால் கொடுக்க முடியவில்லை. சில நாட்கள் முட்டை மட்டுமே கொடுக்க முடிந்தது. அப்போதெல்லாம் என் மகன் இறைச்சி கேட்டு அழுது இருக்கிறான். ஆனால், அதை வாங்க முடியாத நிலையில் இருந்தோம்” என்று தன் மகனை வளர்த்த அனுபவங்களைப் பகிர்ந்தார்.

அச்சிந்தா ஷூலி 2019 இல் காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றபோது அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 2021 இல் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். தற்போது 2022 காமன்வெல்த் போட்டியிலும் தங்கப் பதக்கம் அவர் வசமாகியுள்ளது.