விளையாட்டு

புஜாராவை புகழும் இலங்கை பயிற்சியாளர்!

webteam

புஜாரா. உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர் என்று இலங்கை அணியின் பயிற்சியாளர் நிக் போதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடந்து வருகிறது. மழை காரணமாக இரண்டாவது நாள் போட்டியும் பாதிக்கப்பட்டது. நேற்றைய நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 74 ரன்கள் எடுத்துள்ளது. மழை காரணமாக முதல் நாளில் 12 ஓவர்களும், இரண்டாவது நாளில் 21 ஓவர்களும் மட்டுமே பந்துவீசப்பட்டன. முதல் நாளைப் போல இரண்டாவது நாளும் போட்டி பாதியிலேயே முடித்துக்கொள்ளப்பட்டது. இன்று மழைய குறைய வாய்ப்பிருப்பதால் போட்டி பாதிக்கப்படாது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியில் புஜாரா மட்டுமே நிலைத்து நின்று ஆடிவருகிறார். அவர் உலக அளவில் சிறந்த வீரர் என்று இலங்கை பயிற்சியாளர் நிக் போதாஸ் கூறியுள்ளார். 

அவர் மேலும் கூறும்போது, புஜாரா சிறப்பாக ஆடி வருகிறார். கவுண்டி கிரிக்கெட்டில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு அவர் ஆடிவருகிறார். எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக ஆடக்கூடிய வீரர் அவர். இலங்கை அணியின் லக்மல், புத்திசாலித்தனமான பந்துவீச்சாளர். சரியாக கணித்து பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்துபவர்’ என்றார். 

இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் கூறும்போது, ’எந்த கண்டிஷனிலும் சிறப்பாக விளையாடக் கூடியவர் புஜாரா. சரியான பந்துகளை தேர்ந்தெடுத்து அவர் ஆடிவருகிறார். அதனால் அவரால் நிலைத்து நிற்க முடிகிறது’ என்றார்.