விளையாட்டு

'கோலியை மட்டுமே கேட்கிறீர்கள்; ரோஹித் குறித்து யாரும் பேசாதது ஏன்?' - மேத்யூ ஹைடன் கேள்வி

'கோலியை மட்டுமே கேட்கிறீர்கள்; ரோஹித் குறித்து யாரும் பேசாதது ஏன்?' - மேத்யூ ஹைடன் கேள்வி

JustinDurai

'ரோஹித் ஷர்மாவின் பேட்டிங் நிலைமையும் மிகவும் மோசமாக உள்ளது; ஆனால் அவரைப் பற்றி யாரும் பேசாதது ஏன்?' என்று கேள்வியெழுப்பியுள்ளார் மேத்யூ ஹைடன்.  

நடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி மோசமாக விளையாடி வருகிறார். 12 ஆட்டங்களில் ஒரு அரை சதம் உள்பட 216 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மூன்று முறை முதல் பந்திலேயே ஆட்டமிழந்துள்ளார். இதனைத்தொடர்ந்து, தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடும் 33 வயதான விராட் கோலிக்கு தற்போது சிறிது ஓய்வு தேவை என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்ட பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.

அதேவேளையில் தற்போதைய கேப்டன் ரோஹித் ஷர்மாவின் பேட்டிங் நிலைமையும் மிகவும் மோசமாக உள்ளது; ஆனால் அவரைப் பற்றி யாரும் பேசாதது ஏன் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து ஹைடன் கூறுகையில், ''விராட் கோலி, ரோஹித் ஷர்மா இருவருமே ஒவ்வொரு ஆட்டத்திலும் ரன்களை எடுக்க திணறுகின்றனர். ஆனால் விராட் கோலியை மட்டுமே அனைவரும் கேள்வி எழுப்புகின்றனர். ரோஹித் ஷர்மா குறித்து யாரும் வாய் திறப்பதே கிடையாது. ரவி சாஸ்திரி கோலிக்கு ஓய்வு வேண்டும் என்று கூறுகிறார். அது ரோஹித் ஷர்மாவிற்கு பொருந்துமா என்று தெரியவில்லை. ஏனெனில் கடந்த பல வருடங்களாகவே கோலி மற்றும் ரோஹித் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதோடு மிகவும் ஃபிட்டாக விளையாடி வருகின்றனர்.

மிகப்பெரிய வீரர்களான அவர்கள் இருவரும் நிச்சயம் தங்களது அனுபவத்தின் மூலம் மீண்டு வருவார்கள்.  எனவே அவர்களை விமர்சிப்பது தவறான ஒன்று என்றாலும் விரைவில் அவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்திற்கு திரும்ப வேண்டும்'' என அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பேட்டிங் ஆர்டரை மாற்றிய சஞ்சு சாம்சன் - சுனில் கவாஸ்கர் விமர்சனம்