மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இறுதி போட்டி இன்று நடக்கிறது. அரையிறுதி போட்டியில் 171 ரன்கள் குவித்து அசத்திய ஹர்மன்பிரீத் கவுர் காயமடைந்துள்ளதால் இன்றைய போட்டியில் அவர் ஆடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
11-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப்போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் இங்கிலாந்தும் இந்தியாவும் மோதுகின்றன. மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் இந்திய அணி இருக்கிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுடன் நடந்த அரையிறுதி போட்டியில் 171 ரன்கள் குவித்து அசத்திய ஹர்மன்பிரீத் கவுர் நேற்றைய பயிற்சியின் போது காயமடைந்தார். அவரது தோள்பட்டையில் காயமேற்பட்டுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் அவர் ஆடுவது சந்தேகமே.
இதுபற்றி கேப்டன் மிதாலி ராஜ் கூறும்போது, ‘கவுரின் வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஐஸ் ஒத்தடம் கொடுக்கப்பட்டுள்ளது. காயம் சரியாகிவிடும் என்று நம்புகிறேன். இறுதி போட்டியில் அவர் ஆடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்றார்.
இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது.