பெண்கள் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததால், முன்னணி நிறுவன விளம்பர தூதர் ஒப்பந்தத்தில் இருந்தும் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா நீக்கப்பட்டுள்ளார்.
இந்தி சினிமா இயக்குனர் கரண் ஜோஹர் ‘காபி வித் கரண்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யாவும் கே.எல்.ராகுலும், பல பெண்களுடன் சுற்றியது பற்றியும், பெண்கள் பற்றி தவறாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் இருவரையும் கண்டித்த இந்திய கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியது. அதைத் தொடர்ந்து, நடந்த சம்பவத்துக்கு அவர்கள் இருவரும் வருத்தம் தெரிவித்தனர். அதை ஏற்காத இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய், விசாரணை முடியும் வரை ஹர்திக் பாண்ட்யா, ராகுல் இருவரும் இடைநீக்கம் செய்யப்படுவதாக நேற்று அறிவித்தார்.
இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்து அவர்கள் நீக்கப்பட்டனர். அவர்கள் விரைவில் இந்தியா திரும்புகின்றனர்.
இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவை, முன்னணி உடற்பயிற்சி உபகரணம் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்ய முடிவு செய்திருந்தது. இந்த சர்ச்சை காரணமாக, பாண்ட்யாவை அதில் ஒப்பந்தம் செய்வதில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.