விளையாட்டு

ஹர்திக் பாண்டியா அரைசதம்! ஆர்சிபிக்கு எதிராக 168 ரன்களை குவித்தது குஜராத் அணி!

ஹர்திக் பாண்டியா அரைசதம்! ஆர்சிபிக்கு எதிராக 168 ரன்களை குவித்தது குஜராத் அணி!

ச. முத்துகிருஷ்ணன்

ஹர்திக் பாண்டியா அரைசதம் விளாசியதால் ஆர்சிபிக்கு எதிராக 168 ரன்களை குவித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியில் ஆர்சிபி அணி களமிறங்கி உள்ளது. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் ஓப்பனர்களாக விருத்திமான் சஹா, சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.

சித்தார்த் கவுல் வீசிய முதல் பந்திலேயே பவுண்டரி விளாசி ஸ்கோரை தித்திப்பாக துவக்கி வைத்தார் சஹா. அடுத்து அதே ஓவரில் ஒரு சிக்ஸரை விளாசி அசத்தினார் சஹா. சபாஷ் அகமது வீசிய 2வது ஓவரிலும் சஹா பவுண்டரி விளாச, மறுபக்கம் சுப்மன் கில் வெறும் 1 ரன் எடுத்த நிலையில் ஹசில்வுட் பந்துவீச்சில் அவுட்டாகி நடையை கட்டினார். அடுத்து வந்த மேத்யூ வேட் சஹாவுடன் கைகோர்த்து நிதான ஆட்டத்தை விளையாடத் துவங்கினார்.

ஹசில்வுட் வீசிய 5வது ஓவரில் வேட் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாச ஸ்கோர் மீண்டும் விறுவிறுவென உயரத் துவங்கியது. ஆனால் மேக்ஸ்வெல் வீசிய அடுத்த ஓவரில் 16 ரன்கள் சேர்த்த நிலையில் மேத்யூ வேட் எல்பிடபுள்யூ ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா விக்கெட் வீழ்ச்சியின் நெருக்கடியை உணர்ந்து நிதானமாக விளையாடத் துவங்கினார். ஆனால் சஹாவும் 9வது ஓவரில் டு பிளசிஸால் ரன் அவுட் ஆக, குஜராத் அணி 64 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறத் துவங்கியது.

அடுத்து களமிறங்கிய மில்லர் ஹர்திக் உடன் கூட்டணி அமைந்து அணியை சரிவில் இருந்து மீட்கத் துவங்கினார். மேக்ஸ்வெல் வீசிய 10வது ஓவரில் ஹர்திக் பவுண்டரி லைன் அருகே கொடுத்த ஒரு கடினமான கேட்ச் வாய்ப்பை சுயாஷ் பிரபுதேசாய் தவறவிட, அது சிக்ஸராய் மாறியது. அதன்பின் ஏதுவான பந்துகளை மட்டும் ஹர்திக் எல்லைக்கோட்டுக்கு விரட்டிக் கொண்டிருக்க, மேக்ஸ்வேல் வீசிய 14வது ஓவரில் தொடர்ந்து 2 சிக்ஸர்களை விளாசி அசத்தினார்.

ஷபாஷ் அகமது வீசிய ஓவரிலும் சிக்ஸர் மழை பொழிந்த மில்லர் ஹசரங்கா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். அடுத்து வந்த அதிரடி வீரர் ராகுல் தெவாட்டியாவும் 2 ரன்களில் அவுட்டாக, ரஷீத் கானுடன் கூட்டணி சேர்ந்தார் ஹர்திக். சித்தார்த் கவுல் வீசிய 19வது ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசிய ஹர்திக் 42 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதே ஓவரில் ரஷீத் கானும் சிக்ஸர் விளாசி ஆர்சிபி அணியை கலங்கடித்தார்.

ஹசில்வுட் வீசிய கடைசி ஓவரில் ஹர்திக், ரஷீத் தலா ஒரு சிக்ஸர் விளாச, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது குஜராத் அணி. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 47 பந்துகளில் 62 ரன்களை குவித்தார். இதில் 4 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடக்கம். தற்போது 169 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது ஆர்சிபி அணி.