விளையாட்டு

“ஆங்கிலம் தெரியாததால் பேசவே சிரமப்பட்டேன்” - மனம் திறந்த ஹர்பஜன் 

“ஆங்கிலம் தெரியாததால் பேசவே சிரமப்பட்டேன்” - மனம் திறந்த ஹர்பஜன் 

webteam

ஆங்கிலம் தெரியாமல் கஷ்டபட்டது தொடர்பாக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் மனம் திறந்துள்ளார். 

இந்திய அணியில் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக வலம் வந்தவர் ஹர்பஜன் சிங். இவர் தனது சிறப்பான சுழற்பந்து வீச்சின் மூலம் இந்தியாவிற்கு பல போட்டிகளில் வெற்றிகளை பெற்று தந்துள்ளார். இவர் இந்தியா சார்பில் இதுவரை 236 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்களை எடுத்துள்ளார். அத்துடன் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 417 விக்கெட்களை சாய்த்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தவர் ஹர்பஜன் சிங். தற்போது, இந்திய அணியில் இவர் விளையாடி நீண்ட காலம் ஆகிவிட்டது. ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் ஹர்பஜன் சிங் தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஆங்கிலம் தெரியாமல் கஷ்டப்பட்டது தொடர்பாக மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியுள்ளார். அதில், “நான் முதல் முறையாக 1998ஆம் ஆண்டு பெங்களூருவில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கினேன். இந்தப் போட்டிக்கு முன்பு நடந்த அணியின் கூட்டத்தில் வீரர்கள் ஆங்கிலத்தில் பேசினார்கள். அப்போது எனக்கு ஆங்கிலம் தெரியாது. ஆகவே அவர்கள் பேசியது எதுவுமே எனக்கு புரியவில்லை. அந்தக் கூட்டத்தில் என்னை பேசுமாறு மற்ற வீரர்கள் கூறினார்கள். ஆனால் நான் பேசவில்லை.

இதனைத் தொடர்ந்து அப்போதைய இந்திய கேப்டன் அசாருதின் என்னிடம் வந்து என்ன பிரச்னை என்று கேட்டார். எனக்கு ஆங்கிலம் தெரியாது அதனால் தான் பேசவில்லை என அவரிடம் கூறினேன். அதற்கு அவர் உனக்கு எந்த மொழி தெரியும்? எனக் கேட்டார். எனக்கு பஞ்சாபி மட்டும்தான் தெரியும் என்றேன். அப்படியென்றால் நீ பஞ்சாபியில் பேசு என்று அசாருதின் அறிவுரை வழங்கினார்” எனத் தெரிவித்தார். 

ஹர்பஜன் சிங் தனது முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் வீழ்த்தினார். அதன்பிறகு இரண்டாவது இன்னிங்ஸில் அவர் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.