விளையாட்டு

’சிஎஸ்கேவில் விளையாடுவது குடும்பத்தோடு பிக்னிக் செல்வது போல் இருக்கும்’ - முன்னாள் வீரர்

’சிஎஸ்கேவில் விளையாடுவது குடும்பத்தோடு பிக்னிக் செல்வது போல் இருக்கும்’ - முன்னாள் வீரர்

சங்கீதா

சென்னை அணி நிர்வாகம் ஐபிஎல் போட்டியின்போது ஒரு குடும்பமாக எப்படி செயல்பட்டு, வீரர்களுக்கிடையே பிணைப்பை ஏற்படுத்தும் என்று, அந்த அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

15-வது சீசனுக்காக ஐபிஎல் டி20 சூப்பர் லீக் போட்டி, கடந்த 26-ம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. மே 22-ம் தேதி வரை இந்த சூப்பல் லீக் போட்டிகள் நடைபெற உள்ளது.

ஐபிஎல் போட்டிகளை காண்பது ஒருபக்கம் விறுவிறுப்பாக இருந்தாலும், இந்தப் போட்டிகள் நடைபெறும்போது, இதில் பங்குபெற்ற முன்னாள் வீரர்கள் பலரும், தங்களது சுவாரஸ்ய மற்றும் கசப்பான அனுபவங்களை பகிர்வது தனி விறுவிறுப்பைக் கூட்டும். அந்தவகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங், சுவாரஸ்யமான தகவல் ஒன்றை யூ-டியூப் சேனல் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அதில், “நான் சிஎஸ்கே அணியில் சேர்ந்தபோது, ஒரு புதிய கலாச்சாரத்தை பார்த்தேன். அந்த அணியில், ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களின் குடும்பத்திற்கான டிக்கெட்டுகள், பயணம், தங்குமிடம், உணவு உள்பட அனைத்தையும், அணியின் உரிமையாளரே கவனித்துக் கொள்வார். ஏலம் எடுக்கப்பட்ட வீரருக்கு மட்டுமில்லாமல், அந்த வீரரின் குடும்பத்திலிருந்து 10 பேர் வர விரும்பினால் கூட, அவர்களின் செலவையும், அணியின் உரிமையாளரே ஏற்க தயாராக இருப்பார்.

ஆனால், மற்ற அணிகள் இதனைச் செய்வதில்லை. மற்ற அணிகளில், வீரர்களுடன் அவர்களது மனைவி வந்தால், அவருக்கான செலவுகளை அந்த வீரர் தான் செலுத்த வேண்டும். மற்ற அணியில் ஒரு வீரருக்கு அவர் தங்கும் ஓட்டலில் கூடுதலாக அறை தேவைப்பட்டால், அந்த வீரரின் சம்பளத்தில் இருந்து பிடித்துக்கொள்வார்கள்.

ஆனால், சென்னை அணியில் அப்படி இல்லை. ஆஸ்திரேலியாவில் இருந்து வீரர்கள் வர வேண்டியிருந்தாலும் சரி, அந்த வீரர்களுக்கான டிக்கெட்டுகளை சென்னை அணி நிர்வாகமே முன்பதிவு செய்வார்கள். சென்னை அணியில், தனக்கும், தன் குடும்பத்துக்கும், அணி நிர்வாகம் இவ்வளவு சலுகைகளை செய்வதைக் காணும் போது, அந்த வீரர் மிகவும் உரிமையுடன் அணியில் இணைய ஆரம்பித்து விடுவார்.

நான், சென்னை அணிக்காக விளையாடும் போது, சுமார் 7-8 குடும்பங்கள் இருந்தோம். இதனால் நிறைய குழந்தைகளும் இருந்தனர். இதனால் ஐபிஎல் போட்டி நடப்பது போன்று இல்லாமல், ஏதோ ஒரு பிக்னிக் வந்ததுபோல் இருக்கும். சென்னை அணியில் முற்றிலும் மாறுபட்ட சூழல் நிலவும். மற்ற அணிகளும் அத்தகைய சூழலைக் கொண்டிருந்தாலும், சென்னை அணியில் இருப்பது போன்று இருக்காது.

வீரர்களின் குடும்பங்களுக்காக இவ்வளவு விஷயங்களைச் செய்வதற்காக, சென்னை அணிக்கு வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அனைத்துவிதமான போட்டிகளிலும் இருந்தும் 41 வயதான ஹர்பஜன் சிங் ஓய்வு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.