விளையாட்டு

"ஐபிஎல் போட்டிகளை ரசிகர்கள் தொலைக்காட்சியிலாவது பார்க்கலாம்" ஹர்பஜன் சிங் !

"ஐபிஎல் போட்டிகளை ரசிகர்கள் தொலைக்காட்சியிலாவது பார்க்கலாம்" ஹர்பஜன் சிங் !

jagadeesh

காலி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தயார் என்று இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் 13 ஆம் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஐபிஎல் போட்டிகள் மார்ச் 29 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்படுத்ததையடுத்து ஏப்ரல் 15 ஆம் தேதி போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதாக பிசிசிஐ அறிவித்தது.

இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 25 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனால் உடனடியாக ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கும் வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. மேலும், இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் ஊரடங்கு தேதியை நீட்டிக்கவும் மத்திய அரசு யோசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் நடத்துவது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர் ஹர்பஜன் சிங் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நடத்திய பேட்டியில் கருத்து தெரிவித்துள்ளார், அதில் " ரசிகர்களின் உடல்நலன் மிகவும் முக்கியம், போட்டி நடத்துவதற்கான சூழல் ஏற்பட்டால், காலி மைதானத்தில் ஐபிஎல் ஆட்டங்களை விளையாடத் தயார். அப்படி விளையாடும்போது மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவு விளையாடும்போது கிடைக்காது தான். ஆனால் காலி மைதானத்தில் ஐபிஎல் நடைபெற்றால் குறைந்தபட்சம் அவர்கள் தொலைக்காட்சியிலாவது ஆட்டங்களை ரசிப்பார்கள்" என்றார்.

மேலும் தொடர்ந்த அவர் " மேலும் வீரர்களின் நலனில் நாம் அக்கறை செலுத்தவேண்டும். கிரிக்கெட் மைதானம், வீரர்கள் தங்கும் விடுதிகள் என அனைத்தும் கொரோனா ஊரடங்கு முடிவுக்கு பின்பு சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட வேண்டும். கொரோனா பாதிப்பு முற்றிலும் சீரானதும் ஐபிஎல் போட்டி நடத்தப்பட வேண்டும்" என்றார் ஹர்பஜன் சிங்.