ரஞ்சிக் கோப்பை தொடரில் ஆந்திரா அணியின் கேப்டன் ஹனுமா விஹாரியின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் இடது கையால் பேட் செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ரஞ்சிக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் ஆந்திரா மற்றும் மத்தியப் பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ஆந்திரா கேப்டன் ஹனுமா விஹாரி.
முதல் இன்னிங்ஸின் போது ஆவேஷ் கான் வீசிய அதிவேக பவுன்சரை எதிர்கொண்ட போது ஹனுமா விஹாரியின் கையில் பலத்த அடிபட்டது. இதனால் வலியில் துடித்த அவர் 'ரிட்டயர்ட் ஹர்ட்' முறையில் வெளியேறினார். கையில் லேசான முறிவு ஏற்பட்டிருப்பதால் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறினர்.
இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் ஆந்திரா அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 353 ரன்கள் எடுத்திருந்த போது கடைசி விக்கெட்டிற்காக மீண்டும் களமிறங்கினார் கேப்டன் ஹனுமா விகாரி. வலது கை பேட்ஸ்மேனான ஹனுமா விஹாரி காயம் காரணமாக இடது கை பேட்ஸ்மேனாக மாறினார். கிட்டத்தட்ட ஒரு கையால் மட்டையை பிடித்தபடி விளையாடி இரு பவுண்டரிகளை அடித்தார். 57 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த ஹனுமா விஹாரி, இறுதியாக சரண்ஷ் ஜெயின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
விஹாரியின் ஆட்டத்தால் ஆந்திர அணி 93 ரன்களுக்கு உயர்ந்தது. 244 ரன்கள் முன்னிலை பெற்றது. அவரின் இந்த ஆட்டத்தை பார்த்து எதிரணி வீரர்கள் உட்பட அனைவருமே எழுந்து நின்று கைத்தட்டினர். விஹாரி இதுபோன்று செய்வது முதல்முறையல்ல. கடந்த 2021ம் ஆண்டு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தசைநார் கிழிந்த போதும், வலியை பொருட்படுத்தாமல் விளையாடினார். அஸ்வினுடன் அவர் அன்று அமைத்த பார்ட்னர்ஷிப் தான் எதிரணியின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டதுடன் ஆட்டத்தை டிரா செய்ய உதவியாக இருந்தது.