ஈரமான மைதானத்தை காயவைக்க ஹேர் ட்ரையர், அயர்ன் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டதை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில் மூன்று டி20 போட்டிகள் இந்தியா - இலங்கை இடையே நடைபெறுகின்றன. இதில் முதல் டி20 போட்டி நேற்று அசாமில் உள்ள கவுகாத்தியில் இரவு 7 மணிக்கு தொடங்கயிருந்தது. அதற்கான டாஸில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அப்போது கவுகாத்தியில் பெய்த மிதமான மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அப்போது மைதானத்தில் தேங்கியிருந்த தண்ணீரை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்தன.
முக்கியமாக பிச்சின் ஈரத்தன்மையை போக்க ஹேர் ட்ரையர், அயர்ன் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டது. இதனைக்கண்ட ரசிகர்கள் ஆட்டம் பாதிக்கப்பட்ட சோகத்தையும் மறந்து சிரிக்கத் தொடங்கினர். சமூக வலைதளங்கள் ஹேர் ட்ரையர் போஸ்ட்களால் நிரம்பி வழிந்தது. பிசிசிஐ -யை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள், 2020ல் மைதானத்தை காயவைக்க ஹேர் ட்ரையரா என கேள்வியும் எழுப்பினர்.
பிசிசிஐ போன்ற சிறந்த கிரிக்கெட் வாரியம் ஏன் இப்படி நகைப்புக்குரியது போல நடந்துக்கொள்கிறது என பலரும் கங்குலியை டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த ஹேர் ட்ரையர், அயர்ன் பாக்ஸ் புகைப்படங்களால் மீம்ஸும் பறந்து வருகின்றன.