இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குணதிலகா 6 சர்வதேச போட்டியில் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா. இவர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை சர்வதேச போட்டியில் இருந்து அவரை நீக்கி சஸ்பெண்ட் செய்தது இலங்கை கிரிக்கெட் வாரியம். ’தொடர்ந்து ஒழுங்கீனமாக நடந்து கொள்வதால், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து குணதிலகா சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்’ என்று அறிவித்தது. அதோடு அவரது ஆண்டு வருமானத்தில் 20 சதவிகித்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்று கூறியது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இருந்தாலும் என்ன மாதிரியான ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டார் என்பது பற்றி இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவிக்கவில்லை.
சமீபத்தில், வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போது நைட் கிளப் சென்றுவிட்டு அணியுடன் தாமதாக இணைந்த ஜெஃப்ரி வாண்டர்சே என்ற இலங்கை சுழற்பந்துவீச்சாளருக்கு ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது. இப்போது குணதிலகாவுக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதால் இலங்கை வீரர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாலியல் புகார் காரணமாகவே குணதிலகா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
குணதிலகாவின் லண்டன் நண்பர் ஒருவர் இங்கிலாந்தின் கிளப்பில் கிரிக்கெட் ஆடி வருகிறார். இவர், தனது தந்தையைப் பார்க்க சமீபத்தில் இலங்கை வந்தார். தென்னாப்பிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்தபோது குணதிலகாவின் அறைக்கு வந்தார். அப்போது இலங்கைக்குச் சுற்றுலா வந்த நார்வே நாட்டைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தாராம். வீரர்கள் தங்கும் அறைக்கு மற்றவர்களை அழைத்து வரக்கூடாது என்பது விதி.
இது தொடர்பாக அந்தப் பெண் கொடுத்த புகாரை அடுத்து குணதிலகாவின் நண்பர் கைது செய்யப்பட்டார். ஆனால் குணதிலகா கைது செய்யப்படவில்லை. போலீசார், ’விசாரணையில் குணதிலகாவுக்கும் பாலியல் சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்பது தெரியவந்தது. அதனால் அவரிடம் மேலும் விசாரணை நடத்தவில்லை’ என்று தெரிவித்தனர்.